Saturday, October 31, 2015

மது விற்கும் ஆட்சியாளர்களிடம் மனிதநேயத்தை எதிர்பார்க்க முடியாது.. கோவன் கைது பற்றி ராமதாஸ்

சென்னை: மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது

அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உருவெடுத்திருக்கிறது. மதுவால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதைத் தான் கோவன் அவரது பாடலில் விவரித்திருக்கிறார்.கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.அடுத்தகட்டமாக கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதாக கூறி மாறி மாறி ஆட்சி செய்யும் திமுகவும், அதிமுகவும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை. டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்திருக்கிறார்கள்.தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மது போதையால் இறந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் புதிதாக மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே மதுவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வின் பயனாக மதுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், உளவுத்துறை மூலம் சில அரசியல் கட்சிகளின் உதவியுடன் அந்த போராட்டத்தை தமிழக அரசு திசை திருப்பி மழுங்கடித்தது.அதிமுக மற்றும் திமுக அரசுகள் இதைத் தான் செய்யும்; இதைத் தான் அவர்களால் செய்ய முடியும். அக்கட்சிகளால் போராட்டங்களையும், போராட்டக் காரர்களையும் ஒடுக்கத் தான் முடியுமே தவிர, மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது.அதே நேரத்தில், மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

Thursday, October 29, 2015

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும்; ராமதாஸ்!

உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவ உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடும் (Domicile Reservation) கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்கும் வகையிலான இத்தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும், இந்த நிலையை மாற்றி எல்லா மாநிலங்களிலும் எல்லா மாநிலத்தவருக்கும் இடமளிக்க வேண்டும் என்று ஆணையிடக்கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அதில் தான் இந்த அறிவுறுத்தல்களை நீதிமன்றம் வழங்கியுள்ளது. உண்மையில் இவ்வழக்கை தொடர்ந்தவர்களின் நோக்கம் வசிப்பிட இடஒதுக்கீடு கூடாது என்பது தான். ஆனால், அதை விடுத்து  உயர்கல்விக்கான, குறிப்பாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்புகளில் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

‘‘உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற பொது நலன் கருதியும், அதனால்  மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு உயர்கல்வித் துறையில் இட ஒதுக்கீடு என்பதே கூடாது’’ என 27 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ள நீதிபதிகள், அதே உணர்வை தாங்களும் பிரதிபலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இதை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு  வழங்குவதால் கல்வித்தரம் ஒரு போதும் குறைந்து விடாது. உதாரணமாக தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்ற  மருத்துவர்களில் பலர் நாட்டின் தலைசிறந்த மருத்துவ வல்லுனர்களாக திகழ்வதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

மற்றொருபுறம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதியும் பின்பற்றப்படுவதில்லை; இட ஒதுக்கீடும்  பின்பற்றப்படுவதில்லை. பணம் இருந்தால் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தவர்கள் கூட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்புகளில் சேர முடிகிறது. இன்னும் சில மருத்துவக்கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் ஏலத்தில் விடப்படுகின்றன. இம்முறையில் உயர்படிப்பு படிப்பவர்களால் தரத்தில் ஏற்படாத பாதிப்பு, இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களால் ஏற்பட்டு விடாது. இத்தகைய தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையை நெறிப்படுத்த கோரும் போதெல்லாம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தொழில் செய்யும் உரிமையை பறிக்க முடியாது என்று திட்டவட்டமாக தீர்ப்பளித்த  உச்சநீதிமன்றம், இப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசுவது வினோதத்திலும் வினோதமாகும்.

அதுமட்டுமின்றி, இந்தியா சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் இட ஒதுக்கீட்டு சலுகை மாறாமல் தொடருவதாக நீதிபதிகள் கூறியிருப்பது கவலையளிக்கிறது. இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்கான கருவியாகும்.  அவர்கள் சமுதாயத்தில் சம உரிமை, கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழும் நிலை ஏற்படும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அதற்காக காலக்கெடு நிர்ணயிப்பதே பெரும் சமூக அநீதி ஆகும். சமத்துவம் விரும்பும் சமுதாயத்தில் இத்தகைய சிந்தனைகளுக்கு சிறிதும் இடம் தரக் கூடாது.

அதேபோல், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு தொடர்பான விஷயத்தில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள சிறப்பு சட்டத்தைக் காரணம் காட்டி, இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என்று கூறிவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அடுத்த மாதம் 4 ஆம் தேதி முடிவு செய்வதாக அறிவித்துள்ளனர். வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் பொதுவான நிலைப்பாடும் இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். தமிழகத்தில்  தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இடங்களை மற்ற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. 

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில், தமிழக அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு இல்லாததால் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாநில ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை பெருகி வரும் நிலையில், மாநில அரசின் சொந்த கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் பறிக்க முயல்வது நீதியான செயலல்ல.

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் அதன் பார்வையில் சரியாக பட்டாலும், அவை சமூக நீதியை அழித்து விடும் ஆபத்து உள்ளது. எனவே, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சமூகம் சார்ந்த இட ஒதுக்கீடும், வசிப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடும் தொடர்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Monday, October 26, 2015

தமிழக மீனவர்கள் 34 பேர் கைது: நிரந்தர தீர்வு காண்பதில் இனியும் தாமதம் கூடாது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு அச்சுறுத்தியதால் ஏற்பட்ட பதற்றம் விலகுவதற்கு முன்பாக வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மற்றும் நாகை மீனவர்கள் 34 பேரை சிங்களப்படை இன்று அதிகாலை கைது செய்திருக்கிறது. அவர்களுக்கு சொந்தமான 7 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை சிங்களப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் 11 மீனவர்களை அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளுடன்  சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அதேபோல், கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சிங்களப் படையினர், 23 மீனவர்களை 4 படகுகளுடன் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த இரு தாக்குதல்களில் மீனவர்களின் விசைப் படகுகளும், மீன் பிடி கருவிகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக  மற்ற தமிழக மீனவர்களும் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தாக்குதலும், கைது நடவடிக்கையும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 86 மீனவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் 39 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  இராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.  கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை விடுவிக்கப்படுவர் என்று மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்ததை ஏற்று தான் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன் பின் முதல்முறையாக மீன் பிடிக்கச் சென்றபோதே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை எவ்வளவு கொடிய அணுகுமுறையை கடைபிடிக்கிறது என்பதை உணரலாம்.

ஒருபுறம், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் ரூ.15 கோடி வரை அபராதம் விதிப்போம் என்று இலங்கை அரசு செயலாளர் எச்சரிக்கிறார். அதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த பிறகு, அப்படி எந்த திட்டமும் இல்லை என்று இலங்கை அரசு மறுக்கிறது. விடுதலை செய்வதாக வாக்குறுதி அளிக்க மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாகவே மேலும் 34 மீனவர்களை சிங்கள அரசு கைது செய்கிறது. இவற்றில் எந்த நடவடிக்கையுமே இருதரப்பு உறவை வலுப்படுத்துவதாக  இல்லை. இவை அனைத்துமே இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும் செயல்களாகவே தோன்றுகின்றன. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான இச்செயல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நேரம் வந்து விட்டது.

ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைகள் அதற்கு உகந்ததாக இல்லை. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் தமிழக கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அதன் நடவடிக்கைகள் உள்ளன. மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக வரும் 31 ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தனியாக அனுப்பி  அவரை சந்திக்க வைத்திருப்பது தமிழகத்தின் மீதான மதிப்பை குறைத்துவிடும். தமிழகநலன் சார்ந்த காவிரி பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை போன்றவற்றை தீர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்று பட்டு ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

எனவே, முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பி, காவிரி பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் மீனவர்கள் பிரச்சினையை இந்திய இறையாண்மை சார்ந்த விஷயமாக கருதி, நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, October 25, 2015

எல்லை தாண்டி மீன் பிடித்தால் 15 கோடி தண்டமா? இலங்கையை அடக்க வேண்டும்! : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.  இதற்காக இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாகவும் இலங்கை கூறியுள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு அதன் ஆணவப் போக்கையே காட்டுகிறது; இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கும் போது சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது, கொடூரமாக தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள்  இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியா - இலங்கை கூட்டு ஆணையம் அமைக்கப்பட்டு  இரு தரப்பு சிக்கல்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில்  நடந்த இந்த ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும்  எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இருநாட்டு மீனவர் அமைப்புகளும் பேச்சு நடத்தி முடிவு செய்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும்  போது எந்த அடிப்படையில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் முடிவுக்கு சிங்கள அரசு வந்தது? அதற்கானத் தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி பார்த்தால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக கூறுவதே அபத்தம் ஆகும். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும்  எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக  இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். மீனவர்கள் பிரச்சினையில் இந்தியாவை இலங்கை சீண்டுவது இது முதல் முறையல்ல. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ‘‘நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது?’’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அப்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே, ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் புகுந்து மீன் வளங்களையும், கடல் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பன்னாட்டு கடல் சட்டப்படி கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். அதன்பிறகு தான் மீனவர்களை கைது செய்து 3 மாதங்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அரசின் புதிய முடிவு சட்டமாக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின் மிரட்டல் போக்கை இனியும் அனுமதிக்கக்கூடாது.  தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தாக்கப்பட்ட போதும் அது குறித்து இராமேஸ்வரம் பகுதி காவல்நிலையங்களில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் அடையாளம் தெரியாத சிங்களப்படையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்களையும், அவர்களின் தளபதிகளையும் கைது செய்து ஒப்படைக்கும்படி இண்டர்போல் (INTERPOL) மூலம் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

 மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இம்மாதம் 31 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசவுள்ளார். அப்போது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கை அரசை அடக்கவும்  நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்.’’

தேமுதிக வந்தால் ஏற்போம்: ராமதாஸ் பேட்டி

 

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார். அதையடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.

ரூ.1500 கோடிக்கு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்துள்ளனர். பொம்மைகள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும். காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களிடம் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, இடர்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதுபோல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

முதலமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் ஜெயலலிதா

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

முதலமைச்சராக பதவி வகிக்க தகுதியற்றவர் ஜெயலலிதா. ஆங்கிலேய வைஸ்ராய் கோடை வாசஸ்தலம் செல்வதுபோல கோடநாடு சென்றுள்ளார். 2011ல் பதவியேற்றதில் இருந்து கோடநாட்டில் 145 நாட்கள் ஓய்வு எடுத்துள்ளார். அரசு அதிகாரிகளை கோடநாட்டுக்கு அழைத்து நிர்வாகம் செய்கிறார். 

பொதுவியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாதிப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் பருப்பை குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்க ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அவற்றில் பாதியை அரசே கள்ளச்சந்தைக்கு அனுப்புகிறது. பதுக்கல்காரர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மிக நெருங்கிய கூட்டணி உள்ளது. 

வாரத்திற்கு 40 நிமிடங்கள் கூட முதலமைச்சர் ஜெயலலிதா பணியாற்றுவதில்லை. மக்கள் பிரச்சனைகள் பற்றி கவலைப்படாத அவர் கோடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெற்றால் மட்டுமே காவிரி டெல்டா பகுதியில் கருகும் பயிர்களை காக்க முடியும் என்றார். 

அன்புமணியை ஏத்துக்கங்க, பாமக கூட்டணிக்கு வாங்க... விஜயகாந்த்துக்கு ராமதாஸ் அழைப்பு

திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸை, முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்க வேண்டும். அப்படி ஏற்பதானால் அவர்களை எங்களது கூட்டணியில் வரவேற்க நாங்கள் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக கூறியுள்ளார்.தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார். அதையடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். அவர் கடந்த 156 நாட்களில் ஒரு தடவை தான் அமைச்சரவை கூட்டத்தையே கூட்டி இருக்கிறார்.ரூ.1500 கோடிக்கு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்துள்ளனர். பொம்மைகள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும்.
 

Saturday, October 24, 2015

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ்

 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிலைப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஏழைத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பாராட்டத்தக்கவர்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பவர்கள் குறைந்த ஊதியத்தில் பணி செய்ய கிடைத்த அடிமைகள்; அவர்களை முடிந்த வரைக்கும் வேலை வாங்கிக் கொண்டு தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தனியார் துறைகளில் மட்டுமின்றி, அரசுத் துறைகளிலும் நிலவுகிறது. இப்போக்குக்கு சவுக்கடி தரும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் முறையிட்டனர். அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டார். தொழிலாளர் நலனில் அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் அதை அப்போதே நடைமுறைபடுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், 2004 முதல் 2006 வரை தமிழகத்தை ஆட்சி செய்த ஜெயலலிதா அரசும், 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த கலைஞர் அரசும் இந்த ஆணையை செயல்படுத்தவில்லை. மாறாக,  இந்த ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அதில் தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் அதை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தன. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டிருக்கிறது.

மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக வியர்வை சிந்தி பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்கு அ.தி.மு.க. அரசும், தி.மு.க. அரசும் எத்தனை முட்டுக்கட்டைகளைப் போட்டன என்பதற்கு இந்த வழக்கு தான் சரியான உதாரணம் ஆகும். தொழிலாளர்களின் தோழர்களாக காட்டிக்கொள்ளும் கட்சிகள் தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது தான் தங்களின் தொழிலாளர் விரோத முகத்தைக் காட்டுகின்றன. அது தான் அந்த கட்சிகளின் உண்மை முகமாகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 20 வயதில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிக்கு சேர்ந்த பலரும் 40 வயதைக் கடந்த பிறகும் எந்த பணிப் பாதுகாப்பும் இல்லாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணியாற்றிக் கொண்டிருப்பதையும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் காண முடிகிறது. இத்தகைய அவல நிலைக்கு முடிவு கட்டுவதற்கு உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெரும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எண்ணம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் நல ஆய்வாளர் ஆணை பிறப்பித்த நாளில் இருந்து 960 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் அனைவரையும் அவர்கள் பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற நாளில் இருந்து முன்தேதியிட்டு பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Thursday, October 22, 2015

மின்வாரிய கடன் சீரமைப்பு:விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை நிறுத்தக் கூடாது : ராமதாஸ்



 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் சீரமைப்பு குறித்த மத்திய அரசின் கருத்துரு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு மாளிகையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தின் முடிவு குறித்து தெரியவில்லை. ஆனால், மின்வாரிய நிதி சீரமைப்புக்கான நிபந்தனைகள் கடுமையானவை என்பதால் மக்களை பாதிக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் குஜராத் தவிர மற்ற மாநிலங்களின் மின்வாரியங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளன. மாநில மின்வாரியங்களின் மொத்த கடன்சுமை ரூ.4,22,400 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவற்றில் தமிழ்நாடு மின்சார வாரியம் தான் மிக அதிக அளவாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கித் திணறுகிறது. இதனால் மின்வாரியங்கள் புதிய திட்டங்களைச் செயல்படுத்த எந்த வங்கியும் கடன் தர முன்வருவதில்லை. இந்த நிலையை மாற்றும் நோக்குடன் மாநில மின்வாரியங்களின் கடன் சுமைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இத்திட்டத்தின் நிபந்தனைகள் மிகவும் கடுமையானவையாக உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ள நிலையில், அது பற்றி தான் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார். 

மின்வாரிய கடன் சீரமைப்புத் திட்டத்தின்படி மத்திய அரசின் நிதி உதவியை பெற வேண்டுமெனில்...

1. ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டணத்தை குறிப்பிட்ட சதவீதம் உயர்த்த வேண்டும்,

2. விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை முதல்கட்டமாக மீட்டர் பொருத்தி அளவிட வேண்டும். அடுத்த கட்டமாக அந்த மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்,

3. மின் பகிர்மான கழகத்தை பல கிளைகளாக பிரிக்க வேண்டும்,

4. தனியாரிடமிருந்து அதிக கட்டணத்திற்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்,

5. மின்வாரியங்கள் சொந்தமாக அனல் மின் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் அமைத்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.

& என்பன உள்ளிட்ட ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

 இவற்றில் கடைசி மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுவதால் சாதகமான தாக்கங்கள் தான் ஏற்படும். தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்,  தமிழ்நாடு மின்வாரியமே அதிக எண்ணிக்கையில் அனல் மின் நிலையங்களை அமைத்து குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உண்மையில் இந்த இரு அம்சங்களையும் தமிழக அரசும், மின்வாரியமும் இதுவரை கடைபிடிக்காதது தான் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையில் சிக்கிக் கொண்டதற்கு காரணமாகும்.

அதேநேரத்தில் முதல் இரு பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் தமிழக மக்களும், உழவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 2011&ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7874 கோடிக்கும், 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7350 கோடிக்கும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்தது. அதேபோல், உழவர்களுக்கு தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கி, போதிய அளவு நீர் பாய்ச்ச முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அதை மக்களால் தாங்க முடியாது. அதேபோல், வேளாண்மை லாபமற்ற தொழிலாக மாறிவிட்ட நிலையில், உழவர்களுக்கு  தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டியது கட்டாயமாகும். ஏற்கனவே கடந்த 2003 ஆவது ஆண்டில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தவர் தான் ஜெயலலிதா என்பதால், இம்முறையும் அதே பாதகத்தை செய்து விடுவாரோ? என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தமிழ்நாடு மின்வாரியத்தின் இழப்புக்கு காரணம் அதில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். அதிக எண்ணிக்கையில் மின் திட்டங்களைச் செயல்படுத்தி குறைந்த செலவில் மின்சாரத்தை தயாரித்தாலே அடுத்த சில ஆண்டுகளில் கடனைக் குறைத்து மின்வாரியத்தின் நிதிநிலையை சீரமைக்க முடியும். இதற்கான செயல்திட்டங்கள் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. எனவே, மின் கட்டணத்தை உயர்த்துதல், விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பரிந்துரைகளை ஒரு போதும் தமிழக அரசு ஏற்கக்கூடாது. இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை  முதலமைச்சர் ஜெயலலிதா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Wednesday, October 21, 2015

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ்


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் : -

தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக வார்த்தைக்கு வார்த்தை கூறும் முதலமைச்சர் ஜெயலலிதா செயலில் மட்டும் அதை காட்டுவதில்லை. பொதுமக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக ஒரு மாதத்திற்கு முன்பாக ரூ. 5000 முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீபாவளி திருநாளுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், இதுவரை முன்பணம் வழங்கப்படவில்லை. அதேபோல், தீபாவளி திருநாளையொட்டி போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும். நடப்பாண்டில் எத்தனை விழுக்காடு போனஸ் என்பது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்துடன் தொழிற்சங்கங்கள் பேச்சு நடத்த வேண்டும். இதற்கான கால அவகாசத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பாக போனஸ் குறித்த பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை  அதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தென்படாததால் ஊழியர்களிடையே மனக்குறை நிலவுகிறது.

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு  பதவியேற்றதில் இருந்தே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 19 மாதங்கள் தாமதமாக கையெழுத்திடப்பட்ட நிலையில்,  அந்த காலத்திற்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ரூ. 300 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. அதேபோல், 5 ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை ரூ. 700 கோடி, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை ரூ.140 கோடி, நான்கரை ஆண்டுகளில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1400 கோடி, வருங்கால வைப்பு நிதியாக வசூலிக்கப்பட்டு வைப்பு நிதி நிறுவனத்திடம் செலுத்தப்படாத தொகை ரூ. 4,000 கோடி என தொழிலாளர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.6540 கோடி பாக்கி வைத்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்கள் நலனில் அரசு காட்டும் அக்கறை இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் ஆவர். முன்பணம் மற்றும் போனஸ் முன்கூட்டியே வழங்கினால் தான் தீபாவளியைக் கொண்டாட அவர்கள் தயாராக முடியும். எனவே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய 6 விழுக்காடு அகவிலைப்படி  உயர்வை உடனடியாக அறிவித்து, அதையும், அதற்கான நிலுவைத் தொகையையும் அக்டோபர் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களுக்கும் நடப்பாண்டு தீபாவளிக்கு 25% போனசை ஊதிய உச்சவரம்பின்றி தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் இவ்வாரத்திற்குள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Monday, October 19, 2015

மத்திய அரசு மவுனம் கலைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரியில் தண்ணீர் விட கர்நாடகா மறுப்பு தெரிவிப்பது தொடர்பாக மத்திய அரசு மவுனம் கலைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வறட்சியால் நெற்பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். கர்நாடகத்தின் இந்த சுயநல மற்றும் பிடிவாத அணுகுமுறை இன்னும் சில நாட்களுக்குத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சம்பா பயிர்கள் முற்றிலுமாக கருகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி செப்டம்பர் மாத இறுதி வரை கர்நாடகம் வழங்க வேண்டிய 45 டி.எம்.சி. தண்ணீரை வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக அமைச்சர், இடர்ப்பாட்டுக் காலங்களில் கர்நாடகத்தின் தேவைக்குப் போகத் தான் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும் என்று கூறியிருக்கிறார். கர்நாடக அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இடர்ப்பாட்டுக் காலங்களில் கிடைக்கும் நீரை விகிதாச்சார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதை ஏற்க கர்நாடக அரசு மறுக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்திற்கு கர்நாடகா 37டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டியிருந்தது. அந்நேரத்தில் கர்நாடக அணைகளில் 74.23 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. அதைக் கொண்டு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுத்திருக்கலாம். ஆனால், தமிழகத்திற்கு தராமல் அந்த நீரை கர்நாடகமே பயன்படுத்திக் கொண்டது. கர்நாடக அணைகளில் நேற்றைய நிலவரப்படி 56.99 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதிலிருந்து தமிழகம் கோரும் தண்ணீரை திறந்து விடலாம். ஆனால், அவ்வாறு செய்ய கர்நாடக அரசு மறுப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் கூடுதலான ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. அதற்காக ஜனவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 28 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1457 கனஅடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 12,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் தண்ணீரின் அளவு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. வீதம் குறைந்து வருகிறது.  அணை நீரில் இன்னும் 15 டி.எம்.சி. நீரை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்பதால், இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே பற்றாக்குறை அளவில் தண்ணீர் திறக்க முடியும். கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் சம்பா பயிர்கள் கதிர் விடுவதற்கு முன்பாகவே கருகும் ஆபத்து இருக்கிறது.

இந்த ஆபத்தான நிலையை மத்திய அரசு உணர்ந்ததாகவே தெரியவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின்  இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருந்தால் தமிழக விவசாயிகளுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டிருக்காது.ஆனால், முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசும் மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை... பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 16 மாதங்களாகியும் இதுவரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலாண்மை வாரியம் இல்லாத சூழலில் அதன் பணிகளை செய்வதற்காக உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவாலும் எந்த பயனும் இல்லை. கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி ஆணையிடப்பட்ட போதிலும், அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை. அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக கருதினால், கர்நாடக முதலமைச்சரை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசியல் கணக்குகளைக் கருத்தில் கொண்டு  இப்பிரச்சினையில் அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு மவுனம் காக்கிறது; அதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய துரோகத்தைச் செய்கிறது.

இந்த ஒரு சார்பு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். காவிரிப் பிரச்சினையில் கடைபிடித்து வரும் மவுனத்தை கைவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு  ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அதேபோல், இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கடைபிடித்து வரும் அணுகுமுறை பொறுப்பற்றதாகும். அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுடன் பிரதமரை சந்தித்து முறையிடுவதன் மூலம் மத்திய  அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இனியாவது  இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்பி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளளார்.

Saturday, October 17, 2015

மக்களுக்காக வாழ்கிறாரா ஜெயலலிதா? தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்

மக்களுக்காக வாழ்கிறாரா ஜெயலலிதா? தமிழக மக்கள் இனியும் நம்ப மாட்டார்கள் என  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வின் 44 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதன் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மடல் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வாசகங்களைப் பார்க்கும் போது உருக்கமாக பேசி தமிழக மக்களை மிக எளிதாக ஏமாற்றி விட முடியும் என்பதில் ஜெயலலிதா அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

‘தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை  நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஜெயலலிதா அவரது மடலில் கூறியிருக்கிறார். ‘படிப்பது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோவில்’என்றொரு பழமொழி உண்டு. அதேபோல் தான் இப்போதைய நான்கரை ஆண்டு கால ஆட்சியில் மட்டுமின்றி, இதற்கு முந்தைய பத்தாண்டு கால ஆட்சியிலும் மக்கள் விரோத திட்டங்களை மட்டுமே செயல்படுத்திய ஜெயலலிதா மக்களின் மகிழ்ச்சி மட்டும் தான் எனது லட்சியம்... அவர்களுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் என்று கூறுவது மிகக் குரூரமான நகைச்சுவை; மக்களை ஏமாற்றும் முயற்சி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

2011&ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற போது மக்களுக்கு சேவை செய்வது தான் எனது நோக்கம் என ஜெயலலிதா கூறினார். அந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை இனிப்பு பூசப்பட்ட வார்த்தைகள் தொடர்ந்தன. உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த சில நாட்களில் பால் விலை, பேரூந்து கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி ரூ.20,000 கோடி சுமையை மக்கள் தலையில் சுமத்தியவர் ஜெயலலிதா. அதே ஆண்டில் வரி இல்லாத நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ததாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கு முன்பாகவே ரூ.4,200 கோடி அளவுக்கு மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி மக்களை வதைத்தவர் தான் ஜெயலலிதா. அடுத்த ஆண்டில் நிலங்களின் வழிகாட்டு மதிப்பை உயர்த்தி சுமார் ரூ.5,000 கோடியை மக்களிடமிருந்து பறித்து ஏழைகள் சொந்தமாக நிலம் வாங்க முடியாத சூழலை உருவாக்கியவர் இதே ஜெயலலிதாதான்.

அதுமட்டுமின்றி, அடுத்த மூன்றாண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பால்  விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். ஆனால், பால் கொள்முதல் விலையை அதே அளவுக்கு  உயர்த்தாததுடன், கொள்முதலும் செய்யாததால் பாலை தரையில் கொட்டும் அவலம் நிலவுகிறது. 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.7350 கோடிக்கு இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்தவரும் இவர் தான். மின்சாரமே வழங்காமல் மின் கட்டணத்தை உயர்த்திய சாதனை ஜெயலலிதாவையே சாரும். நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு வரிச் சுமையை சுமத்தி விட்டு, மக்கள் மகிழ்ச்சியே தமது லட்சியம் என்று கூறுவது மனசாட்சி இல்லாதவர்களுக்கு மட்டுமே சாத்தியம்; அதனால் தான் இது ஜெயலலிதாவுக்கு சாதாரணம்.

மது விற்பனையும், மிடாஸ் வருமான அதிகரிப்பும் தான் நான் காண விரும்பும் இலக்குகள் என்று ஜெயலலிதா கூறியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். 2011&ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்கும் போது தமிழகத்தின் மது விற்பனை ரூ.14,965 கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சி முடியப்போகும் நடப்பாண்டில் ரூ.30,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நடப்பு 5 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. அப்படியானால் குறைந்தது ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பணத்தை ஏழைகளிடமிருந்து மதுவைக் கொடுத்து ஜெயலலிதா பறித்திருக்கிறார். 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் ஜெயலலிதா விற்பனை செய்த மதுவைக் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். 4 வயது குழந்தை, பள்ளி மாணவ, மாணவியர் தொடங்கி பெண்கள் வரை மதுவுக்கு அடிமையாகிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழிந்திருக்கின்றன. மதுவையும், தேவையற்ற வரி உயர்வுகளையும் ஜெயலலிதா திணிக்காமல் இருந்திருந்தாலே மக்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியடைந்தும் இருந்திருப்பார்கள். ஆனால், மக்களின் துயரங்களுக்குக் காரணமாக ஜெயலலிதா மக்களின் மகிழ்ச்சியை பற்றி பேசுவது கண்டிக்கத் தக்கது.

‘எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இல்லை. நான் வாழ்வதே தமிழக மக்களுக்காகத் தான்’ என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் இவ்வாசகங்கள் ஏதேனும் திரைப்படத்தில் வசனமாக இடம் பெற்றிருந்தால் கைத்தட்டல் பெற்றிருக்கும். அந்த நம்பிக்கையில் தான் தமிழகத்தையே நாடக மேடையாக்கி, மக்களை ஏமாற்றுவதற்கான வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட வாழ்வும், தனிப்பட்ட எதிர்பார்ர்புகளும் இல்லாததால் தான் தினம் தோறும் அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுகிறதா? எதிர்பார்ப்பே இல்லாத ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் 898 ஏக்கரில் மாளிகை, சிறுதாவூரில் 25.4 ஏக்கரில் பண்ணை வீடு, பையனூரில் 3 ஏக்கரில் பண்ணை வீடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1190 ஏக்கர் நிலம், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1167 ஏக்கர் நிலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலம், முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 23 கிலோ தங்க நகைகள் ஆகியவை எதற்காக? இவை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? இந்த மாளிகைகளும், பிற சொத்துக்களும்  மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து சேர்த்தவை தானே ?

ஜெயலலிதா மக்களை ஏமாற்றி, ஊழல் செய்து சொத்துக் குவிக்கவில்லை என்பதை நம்புவதைப் போல தப்புக் கணக்கு குமாரசாமிகள் வேண்டுமானால் நடிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இனியும் இந்த நாடகங்களை நம்பத் தயாராக இல்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பும் போது இந்த உண்மையை ஜெயலலிதா புரிந்து கொள்வார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Wednesday, October 14, 2015

வீட்டுக் கடன் மீதான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தொழில் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும், அனைவருக்கும் குறைந்த விலையில் வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடன் வட்டியை இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ள போதிலும், அதன் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்தியாவில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கடந்த சில ஆண்டுகளாக கடன்கள் மற்றும் வைப்பீடுகள் மீதான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. இதனால் தொழில் வளர்ச்சியும், கட்டுமானத் துறையின் வளர்ச்சியும் பின்னடைவை எதிர்கொண்டு வந்தன. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பண வீக்கம் குறைந்து வரும் நிலையில், வட்டியை குறைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டன. அதன்பயனாக கடந்த மாத இறுதியில் கடன்கள் மற்றும் வைப்பீடுகள் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள்(0.5%) குறைத்தது. இதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தான் சரியானதாக இருக்கும். ஆனால், எந்த வங்கியும் வட்டிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை.

உதாரணமாக ரிசர்வ் வங்கி அரை விழுக்காடு வட்டிக்குறைப்பை அறிவித்த நிலையில், பொதுத்துறை பாரத ஸ்டேட் வங்கி 0.20% அளவுக்கும், தனியார் துறையை சேர்ந்த எச்.டி.எஃப்.சி வங்கி 0.25% அளவுக்கும் மட்டுமே வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன. ஒரு சில பொதுத்துறை வங்கிகள் இதைவிட குறைவாகவே வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளன. வேறு சில வங்கிகள் இன்னும் வட்டியை குறைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி மொத்தம் 1.25% வட்டியைக் குறைத்து உள்ளது. ஆனால், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அதிகபட்சமாக 0.45% மட்டுமே வட்டியைக் குறைத்துள்ளன. இதனால் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கியில் ரூ.50 லட்சம் வீட்டுக்கடனை 20 ஆண்டுகளில் செலுத்துவதாகக் கூறி ஒருவர் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். ரிசர்வ் வங்கி அறிவித்தவாறு  1.25% வட்டிக் குறைக்கப்பட்டிருந்தால் அவருக்கு ரூ.9,83,040 வட்டிக்கழிவு கிடைத்திருக்கும். ஆனால்,  இப்போது ரூ.3,58,080 மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு வாடிக்கையாளருக்கு, ரூ.50 லட்சம் கடனுக்கு  ரூ.6,24,960 கூடுதல் வட்டியை வங்கிகள் வசூலிக்கின்றன. அப்படியானால், பல்லாயிரம் கோடி ரூபாய்  வீட்டுக் கடனுக்கு வங்கிகள் பொதுமக்களிடமிருந்து எத்தனை நூறு கோடி ரூபாயை கூடுதல் வட்டியாக வசூலிக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே தலை சுற்றுகிறது. இது ஒரு நவீன கொள்ளையாகும்.

ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தாலும், அதிகரித்தாலும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்குவதில் தயக்கமும், தாமதமும் காட்டும் வங்கிகள், பாதிப்புகளை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்துவதில் மட்டும் அதீத சுறுசுறுப்பு காட்டுகின்றன. கடந்த ஓராண்டில் ரிசர்வ் வங்கி 1.25% வட்டி குறைத்த நிலையில், வாடிக்கையாளர் பெற்ற கடன் மீது 0.45% மட்டுமே வட்டிக் குறைப்பு செய்துள்ள வங்கிகள், வாடிக்கையாளர்கள் செய்துள்ள வைப்பீடுகள் மீதான வட்டியை 1.30% அளவுக்கு குறைத்து விட்டன. அதேபோல், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் போது, வாடிக்கையாளர்கள் பெற்ற  கடன் மீதான வட்டியை உடனடியாக உயர்த்தும் வங்கிகள், அவர்கள் செய்துள்ள வைப்பீடு மீதான வட்டியை அதிகரிப்பதில்லை என்று இந்தியா ரேட்டிங்ஸ் (India Ratings) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வட்டிக் குறைப்பின் பயன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்  வங்கிகள் கடைபிடிக்கும் அணுகுமுறை கந்துவட்டிக்காரர்களை விட மிகவும் மோசமான அணுகுமுறையாகும்.

ஒருவர் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் அடுத்த 20 ஆண்டுகளில் வட்டியாக மட்டும்  குறைந்தபட்சம் ரூ.67.79 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டிக் குறைப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுக்கும். ஆனால், வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது, அதை அப்படியே வாடிக்கையாளர் தலையில் சுமத்தும் வங்கிகள், வட்டி குறைக்கப்படும்போது அதன் பயன்களை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்? ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கத் தயங்கியபோது, அதன் ஆளுனரின் அதிகாரத்தை குறைக்க தீர்மானித்த  மத்திய அரசு, இப்போது பொதுத்துறை வங்கிகள் வட்டியை குறைக்க மறுப்பதை வேடிக்கை பார்ப்பது நியாயமா? 

நடுத்தர மக்களின் வீட்டுக் கனவை சிதைக்கும் வங்கிகளின் இப்போக்கை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவித்தவாறு அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை உடனடியாக 1.25% குறைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

Tuesday, October 13, 2015

இலங்கை சிறையில் வாடும் 78 மீனவர்களை படகுகளுடன் மீட்க நடவடிக்கை தேவை!: ராமதாஸ்

 
பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை
’’வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர். அவர்களுடைய 4 படகுகளையும் சிங்களப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது ஆகும்.

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை அத்துமீறி சிங்களப் படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது. இந்தியத் தரப்பில் அதிக அழுத்தம் தரப்பட்டால் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும், படகுகளை சிங்கள அரசே வைத்துக் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பறிப்பதும் தொடர்கதையாகி விட்டது. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவதும், பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவதும், அக்கடிதம் பிரதமர் அலுவலகக் கோப்பில்  உறங்குவதும் வழக்கமான சுழற்சியாகி விட்டதே தவிர மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த 20 நாட்களில் மட்டும் 6 நிகழ்வுகளில் தமிழக மீனவர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 26 படகுகள் ஓராண்டிற்கும் மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. இந்த 6 நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 6 முறை  கடிதம் எழுதியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் ஜெயலலிதா எடுக்கவில்லை. அதேபோல் அக்கடிதங்களைப் பெற்றுக் கொண்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மத்திய அரசும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் தான்  பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

தமிழக மீனவர்களை இலங்கைப் படைகள் கைது செய்தால் 3 மாதங்களுக்கு சிறையில் அடைத்து  வைத்திருப்பார்கள்... அதன்பின்னர் விடுதலை செய்து விடுவார்கள்... இதில் நாம் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை என்ற மனப் போக்கிலிருந்து மத்திய அரசு மாற வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை உணர்ந்து, அதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாகவும் அவ்வப்போது  குற்றச்சாற்றுக்கள் எழுப்பப்படுகின்றன. அவ்வாறு எல்லை தாண்டுவது தவறில்லை என்பது தான் உண்மை.

இரு நாடுகளுக்கு இடையே கடல் எல்லை மிகவும் குறுகியதாக இருக்கும் போது, ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிப்பது சட்டப்பூர்வமான உரிமையாகும். இதை பன்னாட்டு நீதிமன்றத் தீர்ப்புகள் பல்வேறு தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது எல்லை தாண்டினார்கள் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பான பன்னாட்டு சட்டங்களின் அடிப்படையில் வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்யும் வகையில் இலங்கை & இந்திய அரசுகள் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 78 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 38 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்து விட்டதாக ஜெயலலிதா கருதக் கூடாது. மீனவர்களை மீட்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.’’

Monday, October 12, 2015

வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணி செய்யச் சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கைகளை அவர் பணியாற்றும் வீட்டின் உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டித் துண்டாக்கியது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியிருக்கின்றன. இதனால், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

வீட்டு வேலை செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் என்று கூறித் தான் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கஸ்தூரி முனிரத்தினம் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்றதில் இருந்தே அதிக நேரம் பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். உணவும், ஊதியமும் கூட முறையாக வழங்கப்படவில்லை. சவுதி அரேபியாவில் பணியாற்றும் பெரும்பாலான பெண்களின் நிலையும் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது. 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 7 பெண்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அவர்களில் 5 பெண்கள் மிரட்டலுக்கு பணிந்து விசாரணைக்கு வராமல் பின்வாங்கிய நிலையில், கஸ்தூரி உள்ளிட்ட இருவர் மட்டும் துணிச்சலாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பட்டியலிட்டுள்ளனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர்கள் கஸ்தூரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் தப்புவதற்காக மூன்றாவது மாடியிலிருந்து சேலையை கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு இறங்கிய போது தான் அவரை வீட்டு உரிமையாளர்கள் கத்தியால் வெட்டி மாடியிலிருந்து கீழே தள்ளியிருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.

உண்மையில், கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கடலளவு கொடுமைகளில் சிறுதுளி மட்டும் தான். வீட்டுப் பணிக்காகவும், வேறு பணிகளுக்காகவும் அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் வழங்குவதாக அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு அதில் மூன்றில் ஒரு பங்கு கூட தரப்படுவதில்லை. மாறாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுமுறை மறுக்கப் படுவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.  ஓரிடத்தில்  பணியாற்ற பிடிக்கவில்லை என்றால், இன்னொரு இடத்திற்கு மாறும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆடு, மாடுகளை அடைப்பதற்குக் கூட லாயக்கற்ற இடங்களில் தங்க வைக்கப்படுக்கிறார்கள். இதுகுறித்து  வளைகுடா நாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்யப்படும் போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 90 ஆயிரம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 35 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர சுற்றுலா விசாவில் வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் சட்டவிரோதமாக வீட்டுப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு விசா இல்லை என்பதாலும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை உரிமையாளர்கள் பறித்து வைத்துக் கொள்வதாலும் அவர்களால் அந்தக் கொடுமைகளில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இக்கொடுமைகளை அறியாத பெண்கள், தங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வளைகுடா நாடுகளுக்கு சென்று கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

இதற்காக தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அடங்கியக் குழுவை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பி அங்குள்ள தமிழகம் உள்ளிட்ட இந்தியப் பெண்களின்  நிலைமை குறித்து ஆராய வேண்டும். அவர்கள் என்னென்ன வாக்குறுதி அளித்து அழைத்துச் செல்லப் பட்டார்களோ அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதையும், தொழிலாளர் நல விதிகள் அனைத்தும் பின்பற்றப்படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

வளைகுடா நாடுகளில் பணியாற்ற அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரின் பெயரிலும்  ரூ.1.60 லட்சம் (2500 அமெரிக்க டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று 18 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால், சவுதி அரேபியாவும், குவைத்தும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. அனைத்து வளைகுடா நாடுகளும் இதை செயல்படுத்துவதை இந்தியா  உறுதி செய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் பணியாற்ற விருப்பமற்ற பெண்கள் தாயகம் திரும்பவும்,  அவர்கள் பெயரில் அளிக்கப்பட்டுள்ள வங்கி உத்தரவாதம் ரூ.1.60 லட்சத்தை  அவர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கை துண்டிக்கப்பட்ட  கஸ்தூரியை தமிழகம் அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவருக்கு அவரது உரிமையாளர்களிடம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, October 11, 2015

திருநெல்வேலியில் பா.ம.க-வின் தென் மண்டல அரசியல் மாநாடு



ஒரு பைசா ஊழல் இல்லாத, ஒரு கைப்பிடி இயற்கை வளக் கொள்ளை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் 

இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாகியிருக்க வேண்டிய தமிழ்நாட்டின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கிறது. முன்னேற்றத்திற்கு அடிப்படையான அனைத்து வளங்களும் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன என்பது தான் வருத்தம் தரும் உண்மை ஆகும்.

தமிழகத்தின் மக்கள் அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்  என்பது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இதற்காக வேளாண் வளர்ச்சி மிகவும் அவசியமாகும். நல்ல உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்துறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. அதேபோல், வளர்ச்சிக்குத் தேவைப்படும் பிற காரணிகளான தரமான, தடையற்ற குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மின்சாரம், சிறப்பான மனித வளம், நல்ல தலைமை ஆகிய எதுவுமே தமிழகத்தில் இல்லாதது தான் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு முக்கியக் காரணமாகும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் இயற்கை வளங்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப் படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தாது மணலும், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களும், ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கொள்ளையை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. மாறாக, இந்த இயற்கை வளக் கொள்ளைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் விசாரணையை முடக்குவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியிலும், அதை சார்ந்த ஆறுகளிலும் தடையில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையடிக்கப்படும் மணல் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை ஆணையிட்ட பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே மணல் கொள்ளைக்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேளாண்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும்; உற்பத்தித்துறை மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15%  கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள்  ஏற்படுத்தப்பட்டால் தான் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட போதிலும் அங்கு இதுவரை எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை.  இதற்குக் காரணம் போதிய கட்டமைப்பு வசதிகளை திமுக, அதிமுக அரசுகள் ஏற்படுத்தாதது தான்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த ஒரே விஷயம் ஊழல் தான். எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்பது தான் ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக உள்ளது. இன்னொருபுறம்  தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து மக்களைக் கெடுப்பதில் தற்போதைய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரமபத விளையாட்டின் பாம்புகளைப் போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்  தமிழகத்தை வளர்ச்சியில் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் வளர்ச்சி என்ற ஏணியில் பயணம் செய்ய வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பா.ம.க. எதிர்கொள்ளவிருக்கிறது.

மது, ஊழலை ஒழித்து, இயற்கை வளக் கொள்ளையை தடுத்து, அனைவருக்கும் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை வழங்கி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கி,  வறுமை இல்லாத, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகத்தை அமைக்கும் திறன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு  மட்டுமே இருப்பதாக  பா.ம.க. நம்புகிறது. எனவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க.வின் தென் மண்டல அரசியல் மாநாடு உறுதி ஏற்கிறது; அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைக் கோருகிறது. 

Thursday, October 8, 2015

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த  உழவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. நானும் பல்வேறு காலகட்டங்களில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளேன். 

2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த 05.04.2011 அன்று கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நாராயணசாமி நாயுடுவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கப்படும். 1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும்’’ என அறிவித்தார். அப்போது தெலுங்குதேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, இடதுசாரித் தலைவர்கள் பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

உழவர்களால் போற்றப்படும் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் கால தாமதம் செய்யக்கூடாது. நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும்,  1970-71 போராட்டங்களில் கொல்லப்பட்ட உழவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Wednesday, October 7, 2015

கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம்: ஜி.கே.மணி பேட்டி

 

புதுக்கோட்டைக்கு வந்த பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பாமக சார்பில் கலந்துகொண்டேன். அவர் என்னுடன் சட்டமன்றத்தில் ஒன்றாக இருந்தவர், நல்ல மனிதர். கட்சியை மறந்து அஞ்சலி செலுத்த வந்துள்ளோம். 

திருச்சி விமான நிலையத்திற்கு மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரினை சூட்ட வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அன்புமணிராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பல மண்டலங்களில் பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. தற்போது வரும் 11ம் தேதி திருநெல்வேலியில் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாமக திட்டங்களை வகுத்துள்ளது. மதுவிற்கு எதிராக பல போராட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயிரங்களில் நடப்பது லஞ்சம், லட்சம் கோடிகளில் நடப்பது தான் ஊழல். பாமக தலைமையில் மாற்று அணி தேர்தல் நேரத்தில் அமையும். பாமக ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது, லஞ்சம் ஊழல் ஒழிக்க சேவை உரிமை சட்டம், லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும், கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பிற்கு படித்த இளைஞர்கள் மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. 

2011ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த தவறிவிட்டது. 2011ம் ஆண்டு பொன்னி அரிசி 35 ரூபாய இருந்தது தற்போது 55க்கு விற்கப்படுகிறது. 72 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது 155 ரூபாய்க்கு ஏறிவிட்டது. இந்த அதிமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் 100 அல்ல 200 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது. பதுக்கல், ஆன்லைன் வர்த்தகமும் விலைவாசி உயர்வுக்கு காரணமாக உள்ளது. தனிமனித வளர்ச்சிக்கு கல்வி தான் அவசியம் தேவை. எனவே மத்திய அரசு கல்விக்காக நிதியை அதிக அளவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மக்களின் இறுதி புகழிடமாக நீதிமன்றங்கள் உள்ளது. நீதிமன்ற கண்ணியத்தையும், புகழினை நீதிபதிகள், வக்கீல்கள் காக்க வேண்டும். 

சட்டமன்ற தேர்தலில் பாமக முதலமைச்சர் வேட்பாளராக அன்புமணியை அறிவிப்பது கட்சியின் உரிமை. விஷ்ணுபிரியா கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே கருத்து சொல்ல இயலாது. பாமக தொண்டர்கள் எங்களுக்கு தெரியாமல் மது குடிப்பதை தடுக்க இயலாது. ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரும் மது குடிக்க கூடாது என்று கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். 

மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை, புறக்கணிக்கப்படுகிறது. அதிக வேலைவாய்ப்புகள் மத்திய அரசு பணியில் தான் உள்ளது. எனவே தமிழகத்தில் மத்திய அரசு பணிக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும். இதேபோல் மற்ற அந்தந்த மாநிலத்தவர்களுக்கு மாநிலங்களில் மத்திய அரசு பணி வழங்கிட வேண்டும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவில்லை. இதில் மத்திய அரசும் பாராமுகமாக உள்ளது. தமிழக மக்கள் 80 சதவீதம் பேர் காவிரி குடிநீரை நம்பி உள்ளனர். அனைத்து தமிழக கட்சிகளுக்கு இதில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களின் ஜேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நியாயமானது தான். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அன்புமணிராமதாஸ் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், வணிகர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் கருத்துகேட்புக்கு சந்திக்க உள்ளார். இந்த கருத்து கேட்புக்கு பின் பாமக மக்கள் தேர்தல் அறிக்கையாக 2016 ஜனவரி மாதம் வெளியிடப்படும். பல கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்ததற்காக பாமக மக்களிடம் மன்னிப்பு கேட்டது. இதேபோல் மற்ற கட்சிகள் மன்னிப்பு கேட்டது உண்டா என்றார்.

இந்த பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர்கள் மூர்த்தி, அருள்மணி, மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் பெரியசாமி, மாவட்ட தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

மருத்துவக் கல்லூரி வழக்கு: விரைவில் நீதி கிடைக்கும்! அன்புமணி இராமதாசு அறிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த நான் 2009 ஆம் ஆண்டில் அப்பதவிலியிருந்து விலகினேன். அதன் பின் சில ஆண்டுகள் கழித்து, லக்னோ மற்றும் இந்தூர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை 2008 ஆம் ஆண்டில் புதுப்பித்து வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி சிலர் மீது மத்தியப் புலனாய்வுப் பிரிவு(சி.பி.ஐ) வழக்குத் தொடர்ந்தது.

 இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையிலும் (Preliminary Enquiry), பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் (First Information Report)) எனது பெயர் இல்லை. ஆனால், 2012-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின்  குற்றப்பத்திரிகையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் சேர்க்கப்பட்டது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்று கோரி 2012-ஆம் ஆண்டில்  நான் விடுவிப்பு மனு (Discharge Petition) தாக்கல் செய்தேன். அம்மனு கடந்த மூன்றரை ஆண்டுகளாக அடுத்தடுத்து 4 நீதிபதிகளால் விசாரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்று ஆணை பிறப்பித்த நீதிபதி நான் தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை நிராகரித்திருக்கிறார்.

இந்த ஆணை வழக்கமான நீதிமன்ற நடைமுறை தான். இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், இது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது. இதை எதிர்த்து சட்டப்படியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். அதன் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும்; வழக்கிலிருந்து வெளிவருவேன் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற வழக்குகளின் மூலம் எங்களின் செயல்பாடுகளை முடக்க முடியாது. ஊழலுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் முன்பை விட அதிக வேகத்தில் தொடரும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tuesday, October 6, 2015

ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமெனில் பா.ஜ.க. அணியில் இருந்து விலக பா.ம.க. தயார்: அன்புமணி

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிடும் எனில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற நாங்கள் தயார் என்று பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.ADVERTISEMENTஇந்த நிலையில் சென்னை திரும்பிய அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இருந்து ஏமாற்றத்துடனே திரும்பி வந்துள்ளோம். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின் நீர்த்துப்போன தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் இந்தியா ஏன் மவுனம் சாதித்தது எனப் புரியவில்லை. ஐ.நா.வில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை மத்திய அரசும், தமிழக பாஜகவும் முதல் துவக்கம் என்று கூறுவதை ஏற்க முடியாது.போருக்கு ஆயுதம் கொடுத்ததன் காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிக்கின்றன. ஆனால் இந்த விவகாரம் இத்தோடு முடிவடையக் கூடியது என்று சொல்ல முடியாது.ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையில் இலங்கை அரசு குற்றச் செயலில் ஈடுபட்டது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவுக்கு இந்த பிரச்னையைக் கொண்டு செல்லும் அளவுக்கு, தமிழகத்தில் இருந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்துவிட்டதாக அரசும் கருதக் கூடாது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் அவர்களின் கருத்துகளை அறிந்து, அதற்கேற்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.இதன் பின்னர் "ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையாக குரல் கொடுப்பதாக இருந்தால், பா.ஜ.க. கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியே வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளாரே? என்று அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்றால் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற பா.ம.க. தயாராக இருக்கிறது என்றார்.
 

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. ஆர்ப்பாட்டம்!

 


 

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் ராமதாசிடம், பா.ம.க. பா.ஜனதா கூட்டணி நீடிக்குமா? என்று நிருபர்கள் கேட்டனர். 

அதற்கு ராமதாஸ் பதில் அளிக்கையில், ‘பா.ம.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை ஏற்று வந்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம்’ என்றார். 4 கட்சி கூட்டணி பற்றி கருத்து கேட்டபோது, இப்போது அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Sunday, October 4, 2015

ரூ.6540 கோடி நிலுவையை வழங்குக: ராமதாஸ் வலியுறுத்தல்

 


போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.6540 கோடி நிலுவையை வழங்க வேண்டும் என தமிழக அரசை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களாகத் தான் இருப்பார்கள்.ஒரு பக்கம் பணிச்சுமை, மறுபக்கம் கிடைக்க வேண்டிய பணிப்பயன்கள் கிடைக்காதது என அனைத்து வழிகளிலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் குறைகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே கடந்த 2010 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட 11-ஆவது ஊதிய ஒப்பந்தம் 31.08.2013 அன்றுடன்  முடிவடைந்து விட்டதால், 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் 01.09.2013 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர் விரோத அ.தி.மு.க. அரசு செய்த தாமதத்தால் 13.04.2015 அன்று தான் புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தம் தாமதமாக கையெழுத்திடப்பட்டாலும், அது 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்து விட்டதால், இடைப்பட்ட 19 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும் இந்நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 மாதங்களாகியும், வாக்குறுதி அளித்தவாறு ரூ.300 கோடி ஊதிய உயர்வு நிலுவைத் தொகை இன்று வரை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும்போது அதற்கான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கி 5 ஆண்டுகளாக ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை ரூ.700 கோடி வழங்கப்படவில்லை. அதேபோல், அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை 19 மாதங்களுக்கு சுமார் ரூ.140 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த வகையில் மட்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.1,400 கோடி வழங்க வேண்டும். இந்த தொகையை உடனடியாக வழங்கும்படி அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஆணையிட்ட போதிலும் அதை தமிழக அரசு மதிக்கவில்லை. இதனால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளைக் கூட வட்டிக்கு கடன் வாங்கி நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.4,000 கோடி வருங்கால வைப்பு நிதியை வைப்பு நிதி நிறுவனத்திடம் செலுத்தாமல் போக்குவரத்துக் கழகங்களே தங்களின் செலவுக்கு பயன்படுத்துகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து கடன் கிடைப்பதில்லை. 

மேலும், இந்த தொகையை போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தும் வரை அத்தொகைக்கான வட்டியும் தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாது என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவ்வாறு தொழிலாளர்களுக்கு நேரடியாக சேர வேண்டிய ரூ.2540 கோடி, வருங்கால வைப்புநிதி நிறுவனத்துக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.4,000 கோடி என மொத்தம் ரூ.6540 கோடி நிலுவைத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடக்கி வைத்துள்ளன. வருங்கால வைப்பு நிதிக்காக தொழிலாளர்களிடம்  இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை வேறு பயன்பாடுகளுக்கு செலவழிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், சட்டத்தை மதிக்காமல் போக்குவரத்துக் கழகங்கள் தங்கள் விருப்பப்படி செயல்படுகின்றன.

தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளிடம் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். ஆனால், போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் தொழிலாளர்களுக்குரிய நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்று கூறியுள்ளனர். 

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு  காரணம் தமிழக அரசு தான். அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் 422 புதிய பேருந்துகள்  இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள போதிலும், அவற்றை முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைகளால் தான் தொடங்கி வைக்க வேண்டுமென்று 3 மாதங்களாக இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டிருந்த போதும் 500&க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு பல நூறு கோடி ஆகும். இத்தகைய நிர்வாக குளறுபடிகளால் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதுபோன்ற தங்களின் தவறுகளுக்கு தொழிலாளர்களை தண்டிப்பது நியாயமில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு அதன் துணை நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 208 கோடியை ஒதுக்கியிருக்கிறது. 

இது யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றதாகும். எனவே, அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவும், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: