பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தில்லியில் ஓடும் பேரூந்தில் கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், கவலையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நள்ளிரவில் பெண்கள் எந்தவித அச்சமும், பாதிப்புமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் இந்திய உண்மையான சுதந்திரம் அடைந்ததாக கருதமுடியும் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியிருந்தார்.
அதன்படி பார்த்தால் இந்தியா இன்னும் உண்மையான சுதந்திரம் அடையவில்லை என்று தான் கருதவேண்டியிருக்கிறது. இது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
தில்லியில் மட்டுமின்றி, தமிழகத்திலும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. நேற்று கூட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனிவரும் காலத்திலாவது இதுபொன்ற கொடூரங்கள் நிகழாமல் தடுத்து இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தருவதும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தருவதும் தான் தில்லி மாணவிக்கும், தமிழகத்தின் புனிதாக்களுக்கும் நம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment