Tuesday, December 11, 2012

மது விலக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகள்: நிறைவேற்றாவிட்டால் போராட்டம் என ராமதாஸ் எச்சரிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 11.12.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பெற்ற குழந்தைக்கு தாயே நஞ்சு கொடுப்பது எவ்வளவு கொடுமையானதோ, அதைவிடக் கொடுமையானது மக்களை காக்க வேண்டிய அரசே மது விற்பனை செய்வதாகும். மது விற்பது தவறு என்று தெரிந்தும், அதை தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றைத் திருத்தி, மக்களைக் காக்கவேண்டும் என்பதற்காக கடந்த 23 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வந்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின்னர் மதுவிலக்கிற்கு ஆதரவாக தமிழக மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் முழுமையானமதுவிலக்கை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி வரும் 17ஆம் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த பா.ம.க. தீர்மானித்துள்ளது. தமிழக அரசும் மக்களின் இந்த உணர்வுகளை மதித்து, படிப்படியாகவாவது மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
மதுவிலக்கு என்பது நடைமுறைப்படுத்தமுடியாத ஒன்றல்ல. குஜராத், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களிலும் காலங்காலமாக மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் 1949ஆம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.
அதன்படி, ஏதேனும் ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்; அதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்வாக்காளர்கள் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால் உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். இதேபோன்ற நடைமுறையை தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும்.
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் காலை முதல் மாலை வரை உழைத்து பெற்ற ஊதியத்தை மாலை வேளைகளில் தான் மதுக்கடைகளில் இழக்கிறார்கள். இதைத் தடுக்க மதுக்கடைகளில் மது விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 5 மணி நேரம் என குறைக்க வேண்டும். அதேபோல் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் தீப ஒளி , பொங்கல் போன்ற திருநாள்களுக்கு முன்பு 3 நாட்கள், பின்னர் 3 நாட்கள் என மொத்தம் ஒரு வாரத்திற்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள குடிப்பகங்கள் (பார்கள் ) உடனடியாக மூடப்பட வேண்டும். மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம்மூடி, காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதிக்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.
மது என்னும் அரக்கனின் பிடியில் குடும்பத்தலைவர்கள் சிக்குவதால் அக்குடும்பங்கள் படும் பாடு சொல்லி மாளாது. படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் குடிக்க துடித்தல், குடியால் உடல்நலம் பாதிக்கப்பட்டும், விபத்தில் சிக்கியும் குடும்பத்தலைவர்கள் உயிரிழப்பதால் இளம் கைம்பெண்கள் உருவாதல் என எண்ணெற்ற துயரங்களுக்கு குடிப்பழக்கம் தான் அடிப்படையாக அமைகிறது.
குடியால் ஏற்படும் சீரழிவுகள் எத்தகையவை என்பதை குடும்பத்தலைவிகளான பெண்கள் தான் அறிவார்கள் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். மதுவால் ஏற்படும் தீமைகளை தமிழக முதலமைச்சர் அறிவார் என்பதால் மது விலக்கு தொடர்பான கோரிக்கைகளான.....
1) மராட்டியத்தில் உள்ளதைப் போன்று மக்களின் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வகை செய்யும் மதுவிலக்கு சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வரவேண்டும்,
2) மது விற்பனை நேரத்தை 5 மணி நேரமாக குறைக்க வேண்டும்,
3) பண்டிகைக் காலங்களில் ஒரு வாரத்திற்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுக்கடைகளை மூடவேண்டும்,
4) அனைத்துக் குடிப்பகங்களையும் உடனடியாக மூட வேண்டும்,
5) மாதத்திற்கு குறைந்தது 500 கடைகள் வீதம் மூட வேண்டும் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்றுவதுடன், அக்டோபர் 2ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கவேண்டும்.
வரும் 15ஆம் தேதிக்குள் இந்த அறிவிப்பை வெளியிடாவிட்டால், ஏற்கனவே அறிவித்தபடி வரும் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: