Friday, August 7, 2015

தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது... ராமதாஸ்

சென்னை :கடந்த 60 ஆண்டுகளில் 13 சட்டமன்றத் தேர்தல்களுக்கு கூட்டணி மாறியதில் தி.மு.க அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மதுவிலக்கு என்பதே பாமகவின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..மது விலக்கு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் ஓர் கடிதம் எழுதியிருக்கிறார். மது தொடர்பான தி.மு.க.வின் கடந்த கால நிலைப்பாட்டை நியாயப்படுத்த அண்டை மாநிலமான புதுச்சேரி முதல் அமெரிக்கா, நார்வே, ஃபின்லாந்து மற்றும் துருக்கி வரை பல உதாரணங்களைக் கூறியிருக்கிறார்.‘‘கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் காலப்போக்கில் அந்தந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்கவும், கட்சியின் எதிர்காலம், மக்கள் நலன் ஆகியவற்றைக் கருதியும் மாற்றிக் கொள்வது என்பது மாபாதகம் அல்ல'' என்பது தான் தமது தடுமாற்றம் நிறைந்த கொள்கைகளை நியாயப்படுத்த அவர் முன்வைக்கும் சப்பைக்கட்டு வாதம் ஆகும்.கொள்கைகளும், நிலைப்பாடுகளும் மாறலாம்... அதில் தவறில்லை. ஆனால், அவை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். 1947 ஆம் ஆண்டு வரை மதுவை அனுமதிக்கலாம் என்பது அப்போதிருந்த மெட்ராஸ் மாகாண அரசின் நிலைப்பாடு.1948 ஆம் ஆண்டில், மக்களுக்கு மது தேவையில்லை என்று முடிவெடுத்து கள் மற்றும் சாராயக்கடைகளை ஓமந்தூரார் மூடினார். இதுதான் வரவேற்கத்தக்க கொள்கை மாற்றம்.மாறாக 1971 வரை மது தேவையில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றி, மூடிக்கிடந்த கள் மற்றும் சாராயக்கடைகளை திறக்க அனுமதித்தது மக்கள் நலன் சார்ந்த மாற்றம் அல்ல. இதை நியாயப்படுத்த ஒரு நூறு சான்றுகள் அல்ல.... ஓர் ஆயிரம் சான்றுகளை கூறினாலும் அவற்றை நம்பி ஏமாறுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் இனி தயாராக இல்லை.சான்றுகளைக் கூறுவதில் கூட கருணாநிதிக்கு சறுக்கியிருக்கிறது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல, ஒரு தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்த பா.ம.க. அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்தது இல்லையா? என்று கேட்டு, அதை தி.மு.க.வின் மதுவிலக்கு குறித்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டிருக்கிறார்.இரண்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. ஒருவேளை சம்பந்தம் இல்லாமல் பேசுவது என கருணாநிதி சபதம் செய்திருக்கிறாரா? என்பதும் தெரிய வில்லை. 1957 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரையிலான 60 ஆண்டுகளில் 13 சட்டமன்றத் தேர்தல்களுக்கு கூட்டணி மாறியதில் தி.மு.க. அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.‘‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசும் இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?'' என்றும் கலைஞர் வினா எழுப்பியிருக்கிறார்.தமிழகம், புதுச்சேரி மட்டுமல்ல... நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. பலமுறை இதை நானும், பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசும் வலியுறுத்தியிருக்கிறோம்.மதுவிலக்கை தாமே ரத்து செய்து பின்னர் தானே மீண்டும் மது விலக்கு கொண்டு வந்ததாக கருணாநிதி மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம், கடந்த காலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக 5 முறை அறிவித்து ஏமாற்றியதை மறைக்க முயல்கிறார்.முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கருணாநிதிக்கு விருப்பம் கிடையாது... அவ்வாறு விருப்பம் இருந்திருந்தால் கடந்த காலங்களில் பதவியில் இருந்த போதே செய்திருப்பார்;அதுமட்டுமின்றி, தி.மு.க.வினருக்கும் திமுக ஆதரவாளர்களுக்கு மது ஆலைகள் நடத்துவதற்கான உரிமங்களை வாரி வழங்கியிருக்க மாட்டார். இத்தனை தீமைகளையும் செய்து விட்டு இப்போது மதுவிலக்கு.... மது விலக்கு என முழங்குவதன் நோக்கம் விரைவில் வரும் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: