Tuesday, August 18, 2015

குறையும் கரும்பு சாகுபடி: விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

குறையும் கரும்பு சாகுபடி, விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி தொடர்பாக கசப்பான செய்தி வெளியாகியிருக்கிறது. கரும்பு சாகுபடி கடந்த 4 ஆண்டுகளில் 37% குறைந்திருக்கிறது என்பது தான் அந்த கசப்பான செய்தி. தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 386 லட்சம் டன் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் எட்டப்பட்ட வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் 2014-15 ஆம் ஆண்டில் கரும்பு சாகுபடி 500 லட்சம் டன் என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், கரும்பு சாகுபடி  படிப்படியாகக் குறைந்து 245 லட்சம் டன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது நடப்பாண்டில்  மேலும் குறைந்து 200 லட்சம் டன்னுக்கும் கீழ் சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. கரும்பு சாகுபடியை கைவிட்ட உழவர்கள் அதற்கு பதிலாக சவுக்கு, தேக்கு, முந்திரி போன்ற பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த பயிர்கள் லாபம் தரக்கூடியவை தான் என்றாலும், உணவாக  பயன்படக்கூடிய கரும்புக்கு பதிலாக இவை பயிரிடப்படுவது விவசாயத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகவே தோன்றுகிறது. இந்த அவல நிலைக்கு ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

கரும்பு சாகுபடிக்கான செலவுகள் அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான விலை பெருமளவில் குறைந்து விட்டதால் தான் விவசாயிகள் கரும்புக்கு பதிலாக மாற்றுப் பயிர்களை நாடத் தொடங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, கரும்பை கொள்முதல் செய்யும் தனியார் சர்க்கரை ஆலைகள் அதற்கான பணத்தை முழுமையாகவும், குறிப்பிட்ட காலத்திலும் வழங்காதது இன்னொரு காரணம் ஆகும். 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு  கரும்புக்கு ரூ.2100 மட்டுமே வழங்கினார்.

2012 ஆம் ஆண்டில் இது ரூ.2350 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் ரூ.2650 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனால், 2014 ஆண்டில் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. மேலும் உழவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.650 கோடியை தமிழக அரசு இன்னும் பெற்றுத் தரவில்லை.  

2011 ஆம் ஆண்டு வரை கரும்புக்கு மத்திய அரசு அறிவிக்கும் ஆதார விலையுடன், மாநில அரசு டன்னுக்கு ரூ.650 ஊக்கத்தொகை சேர்த்து வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் இது படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது ரூ.450 ஆகி விட்டது. தமிழக அரசு அறிவித்த விலையும் அறிவிப்பு நிலையில் தான் இருக்கிறதே தவிர வழங்கப்படவில்லை. இந்த விலையை  வழங்க முடியாது என்று சர்க்கரை ஆலைகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. அறிவிக்கப்பட்ட விலையை  விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்குக் கூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக 2013-14 ஆம் ஆண்டில் 325 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி 2014-15 ஆம் ஆண்டில், 245 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. ஒரே ஆண்டில் கரும்பு உற்பத்தி 80 லட்சம் டன் குறைந்ததற்கு காரணம் கரும்புக்கான விலையை அரசும், சர்க்கரை ஆலைகளும் போட்டிப்போட்டு டன்னுக்கு ரூ.2200 ஆக குறைத்தது தான். இது வெட்டுக் கூலிக்கும், உரம் வைக்கும் செலவுக்கும்  கூட போதுமானது இல்லை என்பதால் தான் கரும்பு சாகுபடியிலிருந்து விவசாயிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதை சாதாரணமான நிகழ்வாக பார்க்கக்கூடாது. நெல் சாகுபடியிலும் இழப்பு மட்டுமே உழவர்களுக்கு விஞ்சுவதால் அதையும் கைவிட்டு வேறு பயிருக்கு மாறும் ஆபத்து உள்ளது. தஞ்சாவூர், நாகை போன்ற காவிரி படுகைகளில் சவுக்கு பயிரிடப்படுவது வளமையின் அடையாளமல்ல. இப்போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் உணவுக்கு பிறரிடம் கையேந்தும் நிலை உருவாகிவிடும்.

கரும்புக்கு கட்டுபடியாகும் விலையை வழங்குவதன் மூலம் மட்டுமே விவசாயத்தின் வீழ்ச்சியைத் தடுக்க முடியும். எனவே, நடப்பாண்டிலாவது கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்துவதுடன், அது உழவர்களுக்கு வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் விவசாயம் என்ற தொழில் ஒரு காலத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை வருங்காலத் தலைமுறை வரலாற்றுப் புத்தகங்களில் மட்டும் தான் படிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: