Thursday, August 6, 2015

மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை:

தி.மு.க. தலைவர் கலைஞர்,‘நெஞ்சில் ஓர் வஞ்சமில்லா நீட்டோலை’ என்ற தலைப்பில் நேற்று ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தி.மு.க.வின் மதுவிலக்கு வாக்குறுதி குறித்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடை சொல்வதை விட, ஏதோ கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டதைப் போல கொந்தளித்திருக்கிறார் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மது ஒழிப்பு இன்று தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். கடந்த காலங்களில் நான் எதற்காக போராடினேனோ, அதற்காக இப்போது மற்ற கட்சிகளும், மாணவர்களும், பொதுமக்களும்  போராடத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எந்த நேரமும் பின்வாங்குவதற்கு வசதியாக  ஓர் அறிவிப்பை கலைஞர் வெளியிட்ட போது, ‘‘1996 ஆம் ஆண்டில் தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரை 5 முறை இதே வாக்குறுதியை அளித்தீர்களே? முதல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து  10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே... அப்போதெல்லாம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? இந்த 5 வாக்குறுதிகளில் நான்கை ஆட்சியில் இருந்த போது தானே அளித்தீர்கள்... நீங்கள் நினைத்திருந்தால் ஒற்றைக் கையெழுத்தில் அவற்றை நிறைவேற்றியிருக்கலாமே?, ஆனால், அப்படி செய்யாமல் தி.மு.க.வினருக்கும், உங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்பளித்தவர்களுக்கும் மது ஆலை அமைக்க வாய்ப்பளித்தீர்களே? இதற்குப் பிறகும் மது விலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவை காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்’’ என்று கூறினேன். இதில் என்ன தவறு? என்பதை கலைஞர் அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக 5முறை அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை கலைஞரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பா.ம.க. வைத்தது உண்டா? என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ‘‘தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல... அது தொகுதிப் பங்கீடு தான்’’ என்று தொடர்ந்து கூறிவரும் கலைஞர் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பதை காட்டுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் போதெல்லாம் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெறும். அதேபோன்ற ஏற்பாட்டை தமிழகத்தில்  தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ செய்திருந்தால் நிச்சயமாக அதில் மதுவிலக்கை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்திருக்கும். ஆனால், அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இதுவரை முன்வந்தது உண்டா? என்பதை முத்தமிழ் அறிஞர் தான் விளக்க வேண்டும்.

சரி... கலைஞரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் 1. இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை, 2. அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகள், 3. நடுவண் அரசின் அதிகாரங்களுக்கு வரம்பு, 4. விகிதாச்சார தேர்தல் முறையை ஏற்படுத்துதல், 5. முக்கிய முடிவுகளை பொது வாக்கெடுப்புக்கு விடுதல், 6. நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்களை மக்களே திருப்பி அழைக்கும் முறை, 7. தொழில்களை தேசிய மயமாக்குதல், 8.முறையான நிலச் சீர்திருத்தம், 9. ஊழலுக்கு எதிர்ப்பு, 10. தாய்மொழி வழியில் கல்வி, 11. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக்கல்வி, 12. தமிழை ஆட்சி மொழியாக்குதல், 13.தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா ஆகிய கட்சிகளுடன்  தி.மு.க. மாறி மாறி கூட்டணி அமைத்தபோது இந்த கோரிக்கைகளையெல்லாம் கலைஞர் நிபந்தனையாக  வைத்தாரா? குறைந்த பட்சம்... 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு, 1996 ஆம் ஆண்டில் தேவேகவுடா அரசு, 1997 ஆம் ஆண்டில் ஐ.கே. குஜ்ரால் அரசு, 1999 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசு, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மன்மோகன்சிங் அரசு ஆகியவற்றில் சேரும் போது இந்த கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் அமைச்சர் பதவியை ஏற்போம்... இல்லாவிட்டால் கொள்கை என்ற வேட்டியை வைத்துக் கொண்டு அமைச்சர் பதவி எனும் துண்டை வீசி எறிவோம் என்று கொண்ட கொள்கையில் உறுதியானவர் எனக் கூறிக்கொள்ளும் கலைஞர் எப்போதாவது கூறினாரா?

தி.மு.க. ஆட்சியில் தான் முதன்முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதாக பலரும் பிரச்சாரம் செய்வதாக கலைஞர் கூறியிருக்கிறார். மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய மதுவிலக்கு ரத்து 1971 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்பது உண்மைதானே. 1948 ஆம் ஆண்டுக்கு முன் வரை தமிழகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு பகுதியில் மது இருந்து கொண்டு தான் இருந்தது. 1948 ஆம் ஆண்டில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 1971 ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு தலைமுறைக்கு மது என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. 1971 ஆம் ஆண்டில் 45 வயது வரை இருந்தவர்கள் மது போதையை அறியாதவர்களாக இருந்தனர். அப்போது கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்ததன் காரணமாகத் தானே நன்றாக இருந்த தலைமுறை மதுவுக்கு அடிமையானது. அதனால் தானே 1974 ஆம் ஆண்டில் மதுவிலக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் மதுவை ஒழிக்க முடியவில்லை. மது அணையின் கதவுகளை திறந்து விட்டு, ஊர் முழுவதையும் அது கெடுத்த பிறகு அணையை மூடிவிட்டேன் என்று சொல்வது அர்த்தமுள்ளதா? என கலைஞர் சிந்திக்க வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன்.

மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை... மாறாக  சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுகவுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை. மற்றபடி மதுவிலக்கு கோரி இதயசுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில்  மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: