Saturday, August 1, 2015

சசி பெருமாள் தற்கொலை என்று கூறி தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்வது சசிபெருமாளின் உயிரிழப்பை திசை திருப்புவது மட்டுமின்றி, மதுவிலக்கு பிரச்சினையையும் திசை திருப்பும்  செயலாகும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசி பெருமாள் உயிரிழந்தது மக்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சசிபெருமாளின் இறப்பு குறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘‘ செல்பேசி கோபுரத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த சசி பெருமாளை மீட்பதற்காக தீயவிப்பு மற்றும் மீட்புப் படையினர் செல்பேசி கோபுரத்தின் மீது விரைந்து ஏறினார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்’’ என்று  கூறப்பட்டு இருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. இது சசிபெருமாளின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் செயலாகும்.  சுட்டெரிக்கும் வெயிலில் 5 மணி நேரத்திற்கும் மேலாக செல்பேசி கோபுரத்தின் உச்சியில் நின்று  போராடியதால் சசிபெருமாள் சோர்வும், மயக்கமும் அடைந்திருந்தது உண்மை. அவரை மீட்பதற்காக தீயவிப்புப் படை வீரர்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற போது சசிபெருமாள் உயிருடன் இருந்ததை அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்கின்றனர். 

உண்மை இவ்வாறிருக்க சசிபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்வது சசிபெருமாளின் உயிரிழப்பை திசை திருப்புவது மட்டுமின்றி, மதுவிலக்கு பிரச்சினையையும் திசை திருப்பும்  செயலாகும். இலங்கைப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈழத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தி தமிழகத்தில் பலர் உயிர்த்தியாகம் செய்த போது, அவர்கள் வயிற்றுவலி, குடும்பத்தகராறு உள்ளிட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாக அப்போதைய தமிழக அரசு அவதூறு  பரப்பியது. அதற்கும், சசிபெருமாள் உயிரிழப்பு குறித்த அவதூறுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தன்னலம் கருதாமல் சமூகத்திற்காக போராடிய தியாகியை இப்படி இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது.
சசிபெருமாளின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.  இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள ஐயங்களை போக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின்  பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். சசிபெருமாள் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: