Friday, February 20, 2015

தவறான மின்கொள்கை: தமிழகம் கடன்சுமை மாநிலமாக மாறிவிடும்: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் கணேஷ் குமார், தி.மு.க. உறுப்பினர் ஐ.பெரியசாமி ஆகியோர் தெரிவித்தக் கருத்துக்களுக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க தமது அரசு வகை செய்திருப்பதாக கூறியுள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பை கேட்கும் போது இனிப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்துமே கடந்த காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரால் கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் தான். அந்த விவரங்களை புள்ளி மாறாமல் இப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 4640 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவை எதுவுமே அ.தி.மு.க. அரசால் செயல்படுத்தப் பட்டவை அல்ல. முந்தைய ஆட்சியிலும், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களுடனான கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயனாகத் தான் இந்த கூடுதல் மின்சாரம் கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் 2513 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவிருப்பதாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். இதற்கும் காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அல்ல என்பதே உண்மை.

மீதமுள்ள 8880 மெகாவாட் திறன் கொண்ட மின்நிலையங்களை அமைக்கும் பணிகள் எப்போது முடிவடையும்? என்பதை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தால் கூற முடியாது. அவர் பட்டியலிட்டுள்ள திட்டங்களில் பெரும்பாலானவை 2010 ஆம் ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு மேலாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே தான் கிடக்கின்றன. அழும் குழந்தைக்கு வாழைப்பழத்தைக் காட்டி அமைதிப்படுத்துவதைப் போல தமிழகத்தில் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்களை சமாதானப்படுத்துவதற்காக இத்தகைய புள்ளிவிவரங்களை அ.தி.மு.க. அரசு கூறிவருகிறது. பெரிய அளவில் மின்திட்டங்களைஅறிவிப்பதில் பெருமைப் பட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது தான் உண்மை.

 தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் 05.09.2011 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,‘‘அடுத்த 5 ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என தமிழகத்தின் மின் உற்பத்தித் திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கப்படும்’’ என்று அறிவித்தார். ஜெயலலிதா கூறிய காலக்கெடு இன்னும் ஓராண்டில் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் ஜெயலலிதாவின் அறிவிப்பு நிச்சயமாக நிறைவேற்றப்படாது. ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் வழியில் இத்தகைய வெற்று புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதற்கு முயன்றுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா வெளியிட்ட சூரிய ஒளி மின்னுற்பத்திக் கொள்கையில், ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் அடுத்த 3 ஆண்டுகளில் 3000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இதுவரை 2000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கொள்கையே குப்பையில் போடப்பட்டது தான் மிச்சம். அதன்பிறகு சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை தருவதாக அரசு அறிவித்ததால் அதை நம்பி 2064 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்துத் தருவதற்கு 70 தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், இதற்கான ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டுமானால், ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் கையூட்டு தர வேண்டும் என ஆளுங்கட்சித் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதால், பல தனியார் நிறுவனங்கள் தமிழகஅரசிடம் செலுத்திய வைப்பீட்டுத் தொகையைக் கூட திரும்பப்பெறாமல் விலகி விட்டன என்ற குற்றச்சாற்று கூறப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு அவசியமான மின்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூட அ.தி.மு.க. அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம் ஆகும்.

 தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றப்போவதாக ஒருபக்கம் கூறிக்கொள்ளும் ஆட்சி யாளர்கள் மற்றொரு புறம் தனியாரிடமிருந்து 3330 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதற்காக நீண்டகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நாம் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பது மின்மிகையா? அல்லது மற்ற மாநிலங்களிலிருந்து நாம் மின்சாரத்தை வாங்குவது மின்மிகையா? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தான் விளக்க வேண்டும். இதையெல்லாம் விட தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ள கருத்துக்கள் தான் மிகவும் ஆபத்தானவை ஆகும். 3330 மெகாவாட் மின்சாரத்தை தயாரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த ரூ.22,000 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும், அதனால் தான் மின்திட்டங்களைச் செயல்படுத்தாமல் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கம் அபத்தத்தின் உச்சம் ஆகும்.

தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிப்பதற்காக 2013-14 ஆம் ஆண்டில் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்த தொகை ரூ.30,529 கோடி ஆகும். இதைக்  கருத்தில் கொண்டால், இரு ஆண்டுகளுக்கு வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்க செலவிடப்படும் தொகையை மின்திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால் 9,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற முடியும். ஆனால், தமிழக அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை ‘‘ வாடகை சோபா 20 ரூபா விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா’’ என்ற வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதென்பது ஊழலுக்குத் தான் வழி வகுக்குமே தவிர, வளர்ச்சிக்கு துணை செய்யாது .

 இதேநிலை தொடர்ந்தால் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறாது.... கடன்சுமை மாநிலமாகத் தான் மாறும் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்; கிடப்பில் போடப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி  தமிழகத்தின் மின்வெட்டைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: