Tuesday, February 24, 2015

ஊழல் குற்றவாளிக்கு அரசு செலவில் பிறந்த நாள் கொண்டாட்டமா?: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: 
’’மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அன்னை தெரசாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக அரசு எந்திரமும், அரசு நிதியும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 670 தனியார் மருத்துவமனைகளில்  இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நேற்று தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 மருத்துவமனைகளில் இலவச மருத்துவமுகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமுகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு மேல்சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால், அவர்களுக்கு அதே மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பொது சுகாதாரத் துறையின் சார்பில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அளிப்பதையும் நான் ஒருபோதும் எதிர்ப்பவன் அல்ல.

ஆனால், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக இதையெல்லாம் செய்ய நினைக்கும் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களின் சொந்த நிதியிலிருந்தோ அல்லது அ.தி.மு.க.வின் கட்சி நிதியிலிருந்தோ செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதாக இருந்தால் ஆண்டின் 365 நாட்களுக்கும் கூட அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்தலாம். மாறாக அரசு நிதியிலிருந்து ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், இதற்காக கடந்த கால நடைமுறைகளை மீறி தலைமைச் செயலக வளாகத்தையே கொண்டாட்டக் களமாக மாற்றுவதும் கண்டிக்கத்தக்கவை. அதிலும் குறிப்பாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறை சென்ற ஒருவருக்காக இவ்வளவையும் செய்வதை மன்னிக்கமுடியாது.

மருத்துவ முகாம்கள் ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். மரக்கன்றுகள் நடுவது நல்ல விஷயம் தான். இதற்கான திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ, எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளிலோ அல்லது இயற்கையை காக்கவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட நம்மாழ்வாரின் பிறந்த நாளிலோ இத்திட்டத்தை தொடங்கி வைத்திருந்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். மாறாக ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் புதிய திட்டத்தை அறிவித்து தொடங்குவதை ஏற்கவே முடியாது. 

இன்னொருபுறம், அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேரூந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக கோடிக்கணக்கில் அரசு நிதி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த அ.தி.மு.க.வின் செய்திக் குறிப்பை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அரசு செய்திகளை வெளியிடவேண்டிய இந்த இயக்குனரகத்தை எப்போது அ.தி.மு.க. குத்தகைக்கு எடுத்தது என்பது தெரியவில்லை.

தமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயக நடைமுறைகளையோ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ  மதிக்கவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. தமிழக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்களை மாட்டுவதும், அரசு சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை முன்னிலைப் படுத்தி வைப்பதும், குடியரசு நாள் கொண்டாட்டங்களில் அணிவகுக்கும் அலங்கார ஊர்திகளில் ஜெயலலிதா படங்களை இடம்பெறச் செய்ததும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஊழல் குற்றவாளியின்  பிறந்தநாளை எந்தவித வெட்கமும் இன்றி அரசு செலவில் அ.தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்வது தங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லை என்ற  ஆணவத்தையே காட்டுகிறது. 

அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாடும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். இந்த கலாச்சாரத்தின் உச்சகட்டமாகத் தான் ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் அளவுக்கு அரசியலின் தரம் தாழ்ந்திருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க தமிழகத்தில் யாரும் முன்வருவதில்லை என்பது தான் வேதனை அளிக்கிறது. எனினும், இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செலவிடப்பட்ட தொகையை அ.தி.மு.க.விடமிருந்து வசூலிக்க வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும். ’’   

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: