Wednesday, February 11, 2015

தமிழக அரசு இனியும் உறங்கக் கூடாது: ராமதாஸ்



 
 

மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிகட்ட பரிசீலனைக்கு 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. வழக்கம் போலவே, இந்த பிரச்சினை குறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தமது பணி முடிவடைந்து விட்டதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு  இனியும் உறங்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிகட்ட பரிசீலனைக்கு 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. இவற்றில் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், அதன்பின் அணை கட்டும் பணிகள் தீவிரமடையும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை பல ஆண்டுகளாக கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.  காவிரியின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாலும், மத்திய அரசிடம் முறையிட்டதாலும் கர்நாடக அரசின் முயற்சிகள் பல முறை முறியடிக்கப்பட்டன.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகளுக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை கர்நாடக அரசு கோரிய போது, அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் கண்டனம் தெரிவித்தது. புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசையும் தமிழகம் வலியுறுத்தியது.

எனினும், தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாத கர்நாடக அரசு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்து, அணை கட்டுவதை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது. கர்நாடக அரசின் நடவடிக்கை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்ச்சைக்குரிய இத்திட்டத்திற்கு எந்த அடிப்படையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோர அனுமதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. 

 குடிநீர் திட்டத்திற்காக மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறும்போதிலும், அதன் உண்மையான நோக்கம் காவிரி நீர் தமிழகத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் மேகதாதுவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மொத்தம் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை அமைக்க கர்நாடகம் முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடும். எனவே, எப்பாடுபட்டாவது காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழகம் தடுக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசுக்கு அத்தகைய எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. வழக்கம் போலவே, இந்த பிரச்சினை குறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தமது பணி முடிவடைந்து விட்டதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைத்துக் கொண்டிருக்கிறார். மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கின் கதி என்னவானது என்பது கூட தெரியவில்லை. அந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தவோ அல்லது மேகேதாது அணை கட்டும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை.

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களில் இனி விவசாயமே செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். எனவே, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்தியோ அல்லது புதிதாக வழக்கு தொடர்ந்தோ மேகதாது அணை திட்டத்திற்கு தடை ஆணை பெற வேண்டும். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்கையும் விரைவு படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: