Saturday, February 7, 2015

சென்னை மெட்ரோ தொடக்கவிழா: ஜெயலலிதாவுக்காக காத்திருப்பதா? : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தில் கோயம்பேடு -ஆலந்தூர் இடையிலான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து அங்கு எந்நேரமும் தொடர்வண்டி சேவையைத் தொடங்க பெருநகர தொடர்வண்டி நிறுவனம் தயாராக இருக்கிறது. ஆனால், இத்திட்டத்திற்கான தொடக்கவிழா தேதியை தமிழக அரசு இறுதி செய்யாததால் தொடர்வண்டி சேவை தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக  வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக வானூர்தி நிலையம் வரை 23.1 கி.மீ நீளத்திற்கு முதல் பாதையும், சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ நீளத்திற்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு 2009-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 10 கி.மீ. நீளத்திற்குப் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், அப்பாதையில் வணிக அடிப்படையிலான தொடர்வண்டி சேவையை தொடங்க சென்னை பெருநகரத் தொடர்வண்டி நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை பெருநகரத் தொடர்வண்டித் திட்டத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் சம பங்குதாரர்கள் என்ற போதிலும், திட்டம் செயல்படுத்தப்படும் மாநிலத்தின் அரசு என்ற முறையில் திட்டத்தின் தொடக்க விழா குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பெருநகர தொடர்வண்டி சேவையை தொடங்குவதற்கான தேதியை தீர்மானிக்கும்படி கடந்த அக்டோபர் மாதமே தமிழக அரசை பெருநகரத் தொடர்வண்டி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் இதுகுறித்து அரசுக்கு நினைவூட்டப்பட்டது. எனினும், இப்போதும் தமிழக அரசிடமிருந்து இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை.

இப்போதைய நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் பெருநகரத் தொடர்வண்டி சேவையை தொடங்க வாய்ப்பில்லை; அதன்பிறகும் இந்த சேவை எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில்  தண்டிக்கப்பட்டு, பதவி இழந்துள்ள நிலையில் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது என தமிழக முதல்வருக்கு மேலிடத்திலிருந்து அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு முதல்வராக பதவியேற்ற பிறகு தான்  திறப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரியவருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலைகளில் ஜவகர்லால் நேரு 100அடி சாலை முதன்மையானது. இந்தச் சாலையின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பெருநகரத் தொடர்வண்டிப் பாதை திறக்கப்பட்டால் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு  பெருநகரத் தொடர்வண்டி சேவையை உடனடியாக தொடங்காமல், ஊழல் வழக்கில்  ஜெயலலிதா  விடுதலை செய்யப்படுவாரா? என்பது கூட தெரியாமல், அவருக்காக தமிழக அரசு காத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்திட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பல்லாயிரம்  கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட பல திட்டங்களும்  ஜெயலலிதாவுக்காக காத்துக்கிடக்கின்றன.

வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்ததற்காக தண்டிக்கப்பட்டிருப்பவர் ஜெயலலிதா தானே தவிர, அப்பாவி பொதுமக்கள் அல்ல. ஜெயலலிதா தண்டனையிலிருந்து மீண்டு வரும் வரை தமிழக மக்கள்  எந்த வசதியையும் அனுபவிக்கக் கூடாது என்று அரசு நினைத்தால் அது மிகவும் குரூரமான சிந்தனை ஆகும். 

ஊழல் செய்ததற்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டது நியாயம்; அவர் தண்டிக்கப்பட்டதற்காக எந்த தவறுமே செய்யாத அப்பாவி மக்களை அரசு தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? மக்களுக்காகத் தான் அரசு.... மக்கள் முதல்வருக்காக அல்ல... என்பதை உணர்ந்து கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான பெருநகரத் தொடர்வண்டிப் பாதை உட்பட தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றி முடிக்கப்பட்ட  திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அர்ப்பணிக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: