Sunday, February 22, 2015

பனைமரங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் : ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’தமிழர்களின் அடையாளங்களுடன் இரண்டறக் கலந்ததும், தமிழ் இலக்கியங்களைப் பாதுகாக்க உதவியதுமான பனை மரங்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றன. மனிதர்களை வாழ வைக்கும் அவை உயிருடன் வீழ்த்தப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழர்களுக்கு பசு எப்படி புனிதமானதோ, அதேபோல் பனை மரமும் ஒரு காலத்தில் புனிதமாக கருதப்பட்டு வந்தது. உள்நாட்டு பொருளாதாரத்தின் தூண்களாக விளங்கியவற்றில் பனை மரங்களுக்கு  தனி முக்கியத்துவம் உண்டு. கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது ஒட்டுமொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. பனைமரத்தின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு பயன் தரக்கூடியவை ஆகும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனை வெல்லம், 6 பாய்கள், 2தூரிகைகள், 2 கூடைகள் ஆகியவற்றை தயாரிக்க முடியும். எண்ணற்ற குடும்பங்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக பனைமரம் விளங்கியதாக வரலாறு கூறுகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக  பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 இதனால் காய்த்துக் கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதும் பனைமரங்களுக்கு ஆபத்தாகியிருக்கிறது. ஏதேனும் நிலங்களில், பனை மரங்கள் இருந்தால் அவை விளநிலங்களாக கருதப்பட்டு அவற்றை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. இது நல்ல நடவடிக்கை தான்.ஆனால், விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கத் துடிக்கும்  மனை வணிகர்கள் பனைகளை வெட்டி வீழ்த்திவிட்டு தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பனை மரங்கள் வாழ்வாதாரமாக திகழ்ந்தவை என்பது ஒருபுறமிருக்க உயிர் காக்கும் மருந்தாகவும்  விளங்குகின்றன. உடல்நலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும் வெள்ளை சர்க்கரையிலிருந்து மக்களை காக்க பனை வெல்லத்தால் மட்டும் தான் முடியும். அதுமட்டுமின்றி, பதநீர் குடிப்பதால் சிவப்பு ரத்த அணுக்கள் பெருகுவதுடன், நோய் உண்டாக்கும் கிருமிகளும் அழிக்கப்படுகின்றன. இத்தனை சிறப்புக்களையும் கொண்ட பனையை நாம் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். 

இதை வலியுறுத்தும் வகையில் ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் பனையின் பெருமை பேசும் கவிதையை  காட்சியாக்கி குறுந்தகடாக நான் வெளியிட்டேன். அதில் பனை மீது இடியே விழுந்தாலும் அதனால் ஏற்படும்  ஓட்டைகள் பறவைகள் வாழ்வதற்கு கூடாக மாறும் என்றும், வறட்சிக் காலத்தில் பெற்ற தாயாலேயே சோறு ஊட்ட முடியாத அளவுக்கு பஞ்சம் நிலவினாலும், பனையை வெட்டி இரண்டாக பிளந்தால் அதன் தண்டுப் பகுதியில் உள்ள வெள்ளை சோறு பலருக்கு உணவாகி உயிர் காக்கும் என விளக்கப்பட்டிருந்த வரிகளையும்,  அதற்கான காட்சிகளையும் பார்த்தவர்கள் கண் கலங்கினர். அதுமட்டுமின்றி, அதிசயமரம் என்று போற்றப்படும் பனைமரத்தின் படத்தை தைலாபுரம் இல்லத்தில் உள்ள என் அறையில் வைத்து என்னை சந்திக்க வருபவர்களுக்கு அதன் சிறப்பை விளக்கியுள்ளேன்.

பனைகளை பாதுகாப்பது  கடினமான பணி இல்லை. பனையிலிருந்து போதிய அளவில் வருவாய் கிடைக்காததால் தான் அதை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டவில்லை. இதற்கு மாறாக, பனை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான பயிற்சியையும், அவற்றை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருவதன் மூலம் பனை வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். 

இதனால் பனையை காப்பதுடன், அதை நம்பியிருப்பவர்களுக்கு அதிக வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தர முடியும். வீட்டு மனைகளை பிரிக்கும் போது அவற்றில் பனை உள்ளிட்ட எந்த மரங்கள் இருந்தாலும் அந்த மனையில் வீடு கட்டப்படும் வரை அவற்றை வெட்டத் தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சந்தன மரம், தேக்கு மரம் ஆகியவற்றுக்கு இணையாக பாதுகாக்கப்பட வேண்டிய வகையாக பனை மரத்தை அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால் தான் அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்; இதற்காக சட்டப்பேரவையில் புதிய சட்டம்  நிறைவேற்ற வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: