Monday, February 24, 2014

வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படவில்லை! தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!



கர்நாடகமும்  ஆந்திரமும் வேளாண் துறையில் உண்மையாகவே புரட்சி செய்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் வேறு வகையிலான ‘புரட்சிகள்’ தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து  தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். விவசாயிகள் நலனைக் காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவர்களின் சமூக பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. குண்டூசி தயாரிப்பவர் கூட அவரது உற்பத்திப் பொருளுக்கு அவரே விலை நிர்ணயிக்கும் நிலையில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மட்டும் இடைத்தரகர்களும், விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்யும் அவலநிலை நிலவுகிறது.
வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திவரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து  வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் வெளியிட்டு வருகிறது.
விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வசதியாக வேளாண் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்க வேண்டும் - உழவர் ஊதியக் குழு அமைக்க வேண்டும் - வேளாண்மை சார்ந்த திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும்  என்று கடந்த 12 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் பொது நிழல் நிதிநிலை அறிக்கையிலும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இந்த ஆலோசனையை தமிழக அரசு காது கொடுத்து கேட்காத நிலையில், கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக வேளாண்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருவதுடன், தனி அமைச்சரவைக் குழுவையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது வேளாண் விலைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேளாண் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்கப்படும். இதுதவிர அன்றாடம் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக புதிய விளைபொருள் சந்தைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். இதற்காக கர்நாடக முதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சித்தராமய்யா அறிவித்துள்ள இந்தத் திட்டங்களால் கர்நாடக விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி. ஒரு காலத்தில் ஆந்திர விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளையும், பாதிப்புகளையும் எதிர்கொண்டு  வந்த நிலையில், அங்கு 2004ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற இராஜசேகர ரெட்டி, ரூ.65 ஆயிரம் கோடியில் ‘ஜலயாக்னா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒரு கோடி ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு பாசன வசதி செய்து தந்ததால் அங்கு விவசாயம் இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது.
கர்நாடகமும்  ஆந்திரமும் வேளாண் துறையில் உண்மையாகவே புரட்சி செய்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் வேறு வகையிலான ‘புரட்சிகள்’ தான் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து  தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனியும் இழப்புகளை தாங்க முடியாது என்பதால் பல விவசாயிகள் தங்களின் நிலத்தை வந்த விலைக்கு ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விடுகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் நெல் பயிரிடப்படும் பரப்பு 2000 ஆவது ஆண்டில் இருந்ததைவிட குறுவை பருவத்தில் 6.6 விழுக்காடும், சம்பா பருவத்தில் 15 விழுக்காடும் குறைந்து விட்டது. மேலும்  தமிழகத்தின் வேளாண்துறை வளர்ச்சி கடந்த 2012&13 ஆம் ஆண்டில் -12 (மைனஸ் 12)  விழுக்காடாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வேளாண்மையில் இலாபம் கிடைக்காதது தான்.
எனவே, இனியாவது தமிழ்நாட்டில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்ற, கர்நாடக அரசை பின்பற்றி வேளாண் விளைபொருட்களுக்கு உழவர்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் அவர்களை உறுப்பினராகக் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும்; சந்தைகளில் இடைத்தரகர்களுக்கு பதில் விவசாயிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதுடன்,  முதலமைச்சர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: