Thursday, January 2, 2014

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் சமூகநீதிக்கு முடிவு கட்ட சதி:


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 
இயக்குனர், பதிவாளர்கள் உட்பட 84 பணியிடங்களுக்கான நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஒரேயொரு பணியிடத்தை நிரப்புவதாக இருந்தாலும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும்போது அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி மட்டுமின்றி அச்சமும் அளிக்கிறது.
சமூகநீதியின் பிறப்பிடம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என துணிச்சலுடன் அறிவிக்கும் ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எதிலுமே இட ஒதுக்கீடு இல்லை என அறிவிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்பது தான் அச்சத்திற்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி, தலைமைச்செயலக அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்படும் மருத்து வர்களுக்கு மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட 3 மடங்கு வரை அதிக ஊதியம் வழங்கப்படும்; இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் பணியில் சேரலாம்; தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் கூட, வேலையில் சேர்ந்த பிறகு பதிவு செய்து கொள்ளலாம் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவதால் தான் இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் காரணம் கூறப்படலாம். ஆனால், அது ஏற்கக்கூடிய காரணமல்ல.
கடந்த 2001&ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும், நிதி நெருக்கடியை காரணம் காட்டி பணி நியமனங்களுக்கு தடை விதித்தார். ஆசிரியர்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பணி என்பதைக் காட்டி இவ்வளவு சலுகைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, ஒப்பந்தப் பணி என்பதைக் காரணம் காட்டி மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. எனவே, ஒப்பந்தப் பணி என்பதைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை மறுப்பதையும், ஒரே பணியை செய்பவர்களுக்கு இரு விதமான ஊதியம் வழங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக இப்போது மருத்துவத் துறையில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்வதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கு முடிவு கட்டுவதற்கான சதி தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் இப்போது பணியாற்றும் மருத்துவர்களை விட, புதிதாக நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டால், அது ஏற்கனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் மேலாக, வழக்கமான மருத்துவர்கள் தேர்வு முறையை விடுத்து, 10 நாட்களுக்குள் அவசர, அவசரமாக மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசரத் தேவை எதுவும் இப்போது ஏற்படவில்லை.


எனவே, இட ஒதுக்கீடின்றி, மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்று, வழக்கமான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில், இட ஒதுக்கீட்டை அழிப்பதற்கான தமிழக அரசின் சதித் திட்டத்தைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: