Wednesday, August 8, 2012

இந்தி படிக்காத மாணவர்கள் இரண்டாம் தரமானவர்களா? ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்படவேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய  நுழைவுத்தேர்வுகளின் (அஐஉஉஅக்எ) வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல்பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறமுடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே  அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாட்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும் பொதுநுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு , குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கப்படாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி  வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: