Tuesday, August 28, 2012

இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இலங்கை படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருக்கிறார்.
தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு எப்போதுமே இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறது.

2009ம் ஆண்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்தன. இலங்கைக் கடற்படையால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக சீனாவுடன் சேர்ந்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ‘இலங்கை எங்களின் நட்பு நாடு. அதற்கு தொடர்ந்து ராணுவ பயிற்சி அளிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுவது, பூகோள அரசியல் சூழல் குறித்து அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பதையும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உணர்வுகளை அவரும், மத்திய அரசும் மதிக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது.


இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை வரும்போது, கூட்டாட்சி முறையில் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அரசின் கடமை எனவே தான் மாநில அரசுகள் விரும்பியவாறு சுரங்கங்களை ஒதுக்கினோம் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்கும் விஷயத்தில் மட்டும் தமிழகத்தின் கருத்துக்களை மத்திய அரசு மதிக்காமல் உதாசீனப்படுத்துகிறது. இதில் இருந்தே, தமிழர்களை கொல்லும் சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு வரிந்துக் கட்டிக்கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.

இலங்கையுடனான உறவு குறித்த விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கைகளையே கடைபிடித்து வருகிறது. இனியாவது இந்த தவறை திருத்திக் கொள்ளவேண்டும். வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் சிங்கள போர்ப்படை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

அதுமட்டுமின்றி, இனி இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படாது என அறிவிப்பதுடன், பயிற்சித் தொடர்பாக இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: