Friday, August 24, 2012

வெற்றறிக்கை விடுவதை விட்டுவிட்டு மின்வெட்டைப் போக்குங்க: அரசுக்கு ராம்தாஸ் கோரிக்கை

சென்னை: வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் காற்றின் புண்ணியத்தால் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த மின்வெட்டு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கடுமையான இருளில் மூழ்கியுள்ளன. நாள்தோறும் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.
கோவையில் 14 மணி நேர மின்வெட்டால் தொழில் உற்பத்தி அடியோடு முடங்கி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரமே அதிகமாக இருப்பதால் விவசாயம், மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தூங்குவதற்கு கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தது. அது தற்போது குறைந்துவிட்டதால் தான் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என்று கூறி காற்றின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள அரசு முயற்சிக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் மின்வெட்டு போக்கப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை இந்த வாக்குறுதியை அவர் புதுப்பித்து வந்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மின்வெட்டு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. கடந்த 4.2.2012 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் 500 மெகாவாட் திறன்கொண்ட வல்லூர் மின்திட்டத்தின் முதல் பகுதியும், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மின் திட்டத்தின் மூன்றாம் பகுதியும், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மின்திட்டத்தின் முதல் பகுதியும், 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் மின்திட்டத்தின் இரண்டாம் பகுதியும் 2012ம் ஆண்டு ஜுன் மாதத்திலும் உற்பத்தியை தொடங்கும் என்றும், இதன்மூலம் 2012 ஜுன் மாதத்திற்குள் 1950 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இன்று வரை இந்த திட்டங்களில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் மின்வெட்டை போக்க அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ள வில்லை என்பது இதில் இருந்தே தெளிவாகிறது. வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: