Tuesday, July 17, 2012

டாஸ்மாக் கடைகளுக்கு பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: ராமதாஸ் உள்பட 2,000 பேர் கைது

டாஸ்மாக் கடைகளுக்கு பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: ராமதாஸ் உள்பட 2,000 பேர் கைது

 Pmk S Lock The Tasmac Shops Protest
 
சென்னை: பாமக சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் 2,000 பேர் கைது செய்யப்பட்டு சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டுப் போடும் போராட்டம் நடந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் உள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தலா 5 போலீசார் நிறுத்தப்பட்டனர்.
கடைகளுக்கு பூட்டுப் போட முயற்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்தனர். சென்னை தி. நகரில் நடந்த போராட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் ம.பொ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு வந்து போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
மது என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழகத்தில் கடந்த 1971ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மதுக்கடைகளை திறந்து வைத்தார். அப்போது மூதறிஞர் ராஜாஜி தனது தள்ளாத வயதிலும் நேரில் சென்று மதுக்கடைகள் திறக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர் சொன்னதையும் சரி, பெரியார், அண்ணா சொன்னதையும் சரி யாரும் கேட்கவில்லை.
மக்களை காப்பதா? அல்லது மதுவை விற்று மக்களை கொல்வதா? என்ற நானும் 22 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு திராவிடக் கட்சிகள் இன்னும் பதிலளிக்கவில்லை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள், போதைப் பொருட்களை மருத்துவத் தேவைகளைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அரசியல் சட்டத்தைக் கூட திராவிடக் கட்சிகள் மதிக்கவில்லை.

அனைத்து மதங்களும் மது கூடாது என்று வலியுறுத்துவதையும் கேட்கவில்லை. வருவாயை மனதில் கொண்டு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறக்கிறார்கள். இந்த ஆண்டு மட்டும் மதுக்கடைகள் மூலம் ரூ.18,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் அந்த மதுவால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் நோய் தாக்குதல்களாலும் அரசுக்கு ரூ. 1லட்சம் கோடிக்கு மேல் செலவாகிறது.
வாக்குகளைப் பெற ஆண்ட கட்சிகளும் சரி, ஆளுகின்ற கட்சிகளும் சரி மக்களுக்கு இலவசங்களை வாரிக் கொடுத்து அவர்களை ஏமாற்றுகின்றன. மதுவால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரேயடியாக மதுக்கடைகளை மூட முடியாது என்றால் படிப்படியாக மூடுங்கள். மும்பையில் ஒரு பகுதியைச் சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்துப் போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். அந்த சட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.
மதுக்கடைகளை மூட இன்னும் 6 மாத கால அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்று வீதிக்கு வீதி வந்து போராடாமல் இரவோடு, இரவாக மதுக்கடைகளுக்குப் பூட்டு போடுவோம் என்றார்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மட்டும் போராட்டம் நடத்திய சுமார் 2,000 பாமகவினர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனவைரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இதே போன்று மாநிலம் முழுவதும் ஏராளமான பாமகவினர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: