Sunday, May 13, 2012

மத்திய அரசின் 'சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கண்துடைப்பு நாடகம்': ராமதாஸ்

சென்னை: 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தக் கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் ஆணைப்படி தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்கும் மக்களின் சாதி பெயர்கள் சரியாக பதிவு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் போது சாதியின் பெயரை பதிவு செய்வதில் பல தவறுகள் நிகழ்கின்றன. ஒருவர் தனது சாதி பெயர் குடியானவர் என்று கூறினால் அதை அதிகாரிகள் அப்படியே பதிவு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற உண்மையான விவரம் இந்த கணக்கெடுப்பின் மூலம் வெளிவராது. கணக்கெடுப்பை மத்திய உள்துறை மூலமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, இப்போது கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுகிறது. இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பயனும் இல்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறுவதற்கு பதிலாக, தமிழக அரசு தன்னிச்சையாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு தொடரும் என்று அறிவித்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயல் என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடர்ந்தால் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு பெறுவோரின் எண்ணிக்கையையும், இடஒதுக்கீட்டையும் நிருணயித்தீர்கள்? என்று உச்சநீதிமன்றம் வினா எழுப்பினால் அப்போது தமிழக அரசு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியவாறு தமிழக அரசே கணக்கெடுப்பை நடத்தி ஜாதி பெயர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். சமூக நீதியைக் காக்கும் இந்த முக்கிய கடமையை தமிழக அரசு உடனடியாகச் செய்து முடிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: