Sunday, May 6, 2012

தமிழகம் தாங்குமா? என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது : ராமதாஸ் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்களின் உரிமைகளை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுப்பதற்காக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், * தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முதலியார், முக்குலத்தோர், கொங்கு வேளாளர், நாடார், நாயுடு, யாதவர், செட்டியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறப்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மத்திய அரசில் வன்னியர்களுக்கு 2 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். * மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதில் சமூக, பொருளாதார, சாதி கணக்கெடுப்பை தற்போது நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறது. இது உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு அல்ல. இதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.7.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டது. எனவே தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். ஆசிரியர்கள் மற்றும் சிற்றூர் நிர்வாக அதிகாரிகளை கொண்டு குறைந்த செலவில் மிக குறுகிய காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். * மது விற்பனையால் அரசின் வருமானம் அதிகரித் தாலும், லட்சக்கணக்கான குடும்பங்கள் அழிவதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை படிப்படியாக குறைத்து முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது’’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் ராமதாஸ், ’’வன்னியர் பரம்பரை நாடாண்ட பரம்பரை. மீண்டும் நாம் நாட்டை ஆளவேண்டும். இப்போது இலவசங்களை கொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். 45 ஆண்டுகளாக ஆட்சியை நடத்திய இவர்களுக்கு ஆள தகுதி இல்லை. வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்து உள்ளது. அப்படியொரு போராட்டத்தை மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தினால் தமிழகம் தாங்குமா? எங்கள் இளைஞர்கள் போராட தயாராக இருக்கிறார்கள். அவர்களை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாது. தமிழக சிறைகளை நிரப்ப லட்சக்கணக்கான பாட்டாளி இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சிறை செல்ல தயங்க மாட்டோம். நானும் ஒரு வருடம் சிறையில் இருக்க தயார். ஆகவே நாங்கள் போராட்டம் அறிவிப்பதற்கு முன்னதாக வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை அறிவியுங்கள். அல்லது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எந்த மாதிரியான போராட்டம்? எப்படி அந்த போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவிப்போம்’’ என்று பேசினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: