Sunday, March 27, 2011

எங்களை விமர்சிக்க தே.மு.தி.க.,வுக்கு தகுதியில்லை': ராமதாஸ் எச்சரிக்கை

தர்மபுரி: ""பா.ம.க.,வை விமர்சனம் செய்ய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எந்த தகுதியும் இல்லை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



தர்மபுரியில் நடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு, முன்னாள் எம்.பி., செந்தில் தலைமை வகித்தார். தர்மபுரியில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது அடக்குமுறை ஏவிய ஜெயலலிதா குறித்து 2009 மார்ச் 28 ல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதை அ.தி.மு.க., தொண்டர்கள் மறக்கக் கூடாது. தன் கையெழுத்து இல்லையென கூறிய ஜெயலலிதாவிடம் நாட்டை ஒரு போதும் மக்கள் ஒப்படைக்கக் கூடாது என, பேசிய விஜயகாந்த், மக்களை ஏமாற்றும் வகையில் இது நாள் வரை யாருடனும் கூட்டணி இல்லையென கூறிவிட்டு, தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். பல இடங்களில் தே.மு.தி.க., கட்சியைப் பற்றி நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், விஜயகாந்த், பா.ம.க.,வை பற்றி விமர்சனம் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாது.



அரசியலின் அரிச்சுவடி தெரியாத விஜயகாந்த், பா.ம.க., பற்றி விமர்சனம் செய்ய தகுதியில்லை. கேட்டு பெறும் இடத்தில் பா.ம.க., உள்ளது; கொடுக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளதால், பா.ம.க.,வுக்கு ஒதுக்கிய சட்டசபை தொகுதிகளை அமைதியாக வாங்கிக் கொண்டது. தனித்து நின்று தன் பலத்தைக் காட்டிய பென்னாகரம் தொகுதியை தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனுக்கு விட்டுக் கொடுத்ததை தி.மு.க.,வினர் நினைத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதியிலும் ஐனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: