Wednesday, March 30, 2011

ருணாநிதியை முதல்வராக்க பணியாற்றுங்கள்: ராமதாஸ்

மார்ச் 30: திமுக தலைவர் கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு விடுதலைச் சிறுத்தைகளும், பா.ம.க.வினரும் இணைந்து கடுமையாகத் தேர்தல் பணியாற்ற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

உளுந்தூர்பேட்டை வட்டம் மடப்பட்டு கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது யூசுபை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது:

தலித் மக்களும், வன்னியர் மக்களும் மிகுதியாக உள்ள பகுதி இது. வேட்பாளர் முகமது யூசுப் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். இவரை வெற்றிப் பெற செய்யவேண்டும். இந்த மாவட்டத்தில் பாமக 3 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும் மற்றும் கூட்டணிக் கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இவர்கள் வெற்றிப்பெற நானும், தம்பி திருமாவளவனும் நிற்பதாக நினைத்து இரு சமுதாய மக்களும் வாக்களிக்க வேண்டும். கருணாநிதியை 6-வது முறையாக முதல்வராக்குவதற்கு தேர்தலில் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றார் ராமதாஸ்.

இந்தக் பொதுக்கூட்டத்துக்கு உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருநாவலூர் ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ஆர்.வசந்தவேல் வரவேற்றார்.

பாமக எம்.எல்.ஏ. கலிவரதன், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், மாவட்டத் தலைவர் தமிழ்வாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வெற்றிச்செல்வன், துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, இளஞ்சிறுத்தைகள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் செ.க.சேரன், திமுக நகரச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேட்பாளர் முகமது யூசுபை அறிமுகப்படுத்தி மெழுகுவர்த்தி சின்னத்துக்கும் கூட்டணிக் கட்சிகள் சின்னத்துக்கும் வாக்களிக்க வேண்டும் என சிறுப்புரையில் பேசினார்.

கூட்டத்தில் திமுக மாவட்டப் பிரதிநிதி களத்தூர் ஜெகதீசன், மாவட்டக் கவுன்சிலர்கள் மேட்டத்தூர் பழனி, தங்க.விஸ்வநாதன், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வேட்பாளர் முகமது யூசுப் ஏற்புரையாற்றினார். பாமக முன்னாள் மாவட்டச் செயலாளர் வ.ச.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

திருக்கோவிலூரில்: ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

திருக்கோவிலூரில் செவ்வாய்க்கிழமை திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியது:

நானும் திருமாவளவனும் விழுப்புரம், மடப்பட்டில் நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினோம். பின்னர் திருமாவளவன் தர்மபுரி மாவட்டத்துக்கு அவசரமாகச் சென்றுவிட்டதால் இக்கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. அதனால் உங்களோடு நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் எழுச்சியோடு இருக்கின்றீர்கள்.

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கத்துக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் யாருமே இல்லை. குறிப்பாக 41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் நானும் திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். விழுப்புரம், திண்டிவனத்தில் பேசப் போகிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்

போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கருணாநிதி சொன்னதை அப்படியே ஜெயலலிதா சொல்கிறார். விஜயகாந்த் பற்றி நான் எதுவும் பேசியது கிடையாது. அந்தக் கட்சிப் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் கும்மிடிப்பூண்டியில் பேசிய விஜயகாந்த் என்னை போராட்ட மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சொன்னதைப்போல் நான் ஒரு போராட்ட மன்னன்தான். நான் செய்த போராட்டங்கள் ஏராளம். தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக போராட்டம் செய்தேன்.

இதையெல்லாம் நீங்கள் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் ஆகியோரது வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.

விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். காரணம் இத்தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார் ராமதாஸ்.

இக்கூட்டத்துக்கு பின் பகண்டை கூட்ரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு ஆதரவாக ராமதாஸ் பேசினார்.

கள்ளக்குறிச்சி: திமுக அரசு செய்த சாதனைகளால் ஏழை மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் உதயசூரியனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சங்கராபுரம் பூட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தார்.

தா.உதயசூரியனை ஆதரித்து ராமதாஸ் பேசியது: எந்த வேட்பாளருக்கும் இல்லாத சிறப்பு அம்சம் வேட்பாளர் உதயசூரியன், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஆகும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம். 5 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது ஏழை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது என்றார் ராமதாஸ்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. ஆ.அங்கையற்கண்ணி, சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் முனுசாமி, பாமக மாவட்டச் செயலாளர் கே.பி.பாண்டியன், சங்கராபுரம் பாமக நகரச் செயலாளர் பபுலு, ஒன்றியச் செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சித் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

பின்னர் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஏ.சி.பாவரசை ஆதரித்துப் பேசுவதற்காக வந்தார். நேரம் 10.20 மணி ஆகிவிட்டதால் தேர்தல் விதிமுறைப்படி பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் வேட்பாளரின் கரங்களை உயர்த்தியும் மெழுகுவர்த்தி எரிந்த நிலையில் உள்ள சின்னத்தை தூக்கியபடி மக்களிடம் காண்பித்து ஜாடையில்

மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: