Sunday, March 6, 2011

பா.ம.க.,வில் புதுமுகங்களுக்கு "சீட்' : 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு "கல்தா' உறுதி

சட்டசபை தேர்தலில், புதுமுகங்களுக்கு சீட் கொடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளது. அதனால், 12 எம்.எல்.ஏ.,க்களுக்கு, "கல்தா' கொடுக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.,வுக்கு, 31 சீட் வழங்கப்பட்டுள்ளது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு, தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


தொகுதி விவரங்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு, தி.மு.க., குழு ஒப்புதலுடன் பா.ம.க., போட்டியிடும், 31 தொகுதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படும். அதில், 60 சதவீதம் பா.ம.க., தேர்வு செய்த தொகுதிகளும், மீதமுள்ள, 40 சதவீதம், கூட்டணி தலைமை என்ற முறையில் தி.மு.க., ஒதுக்கீடு செய்த தொகுதிகள் அடங்கும். அதன்பின், நிர்வாகக்குழு கூடி, பா.ம.க., வேட்பாளர்களை முடிவு செய்ய உள்ளது.


பா.ம.க., சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்ய, சமீபத்தில் கல்லூரி மாணவர்களை கொண்டு, "சர்வே' நடத்தப்பட்டது. அன்புமணி ஆளுகைக்கு உட்பட்டு நடத்தப்பட்ட சர்வேயில், "தோழமை கட்சிகளோடு ஒருங்கிணைப்பு இல்லாமை, பொதுமக்களின் மத்தியில் அவப்பெயர் மற்றும் சொந்த கட்சியினர் மத்தியில் இணக்கமான உறவு இல்லாமை' போன்ற அசாதாரண சூழலுக்கு காரணமான எம்.எல்.ஏ.,க்கள் யார் என இனம் காணப்பட்டது.


அதன் அடிப்படையில், சிட்டிங் எம்.எல்.ஏ., 12 பேர் மீது பாதகமான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, வரும் தேர்தலில், சிட்டிங் எம்.எல்.ஏ., 18 பேரில், ஆறு பேருக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்க, பா.ம.க., தலைமை பரிசீலனை செய்து வருகிறது. மணி, வேல்முருகன், நெடுஞ்செழியன், ஆறுமுகம், இளவழகன், மூர்த்தி ஆகியோருக்கு மீண்டும் எம்.எல்.ஏ., சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.


மீதமுள்ள, 25 தொகுதிகளில் புதுமுகங்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்களுக்கு சீட் வழங்க, ராமதாஸ் ஆலோசித்து வருகிறார். வரும் தேர்தலில், சீட் ஒதுக்கீடு செய்யும் பொறுப்பு அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், அன்புமணிக்கு நெருக்கமான மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படலாம் என, பா.ம.க., முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கடந்த முறை, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வில் முக்கிய பதவிகள் வகிக்கும் மாவட்ட செயலர், ஒன்றிய, நகர செயலர் உள்ளிட்டோர், சீட் கேட்டு விருப்ப மனு செய்திருந்தனர். தற்போதும், விருப்ப மனு செய்துள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக, பா.ம.க., கேட்கும் தொகுதிகளில், 60 சதவீதம் மட்டும் கொடுக்க தி.மு.க., முன்வந்துள்ளது.


சேலத்தில் 2 தொகுதி: சேலம் மாவட்டத்தில் பா.ம.க.,வுக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள இடைப்பாடி தொகுதியுடன் புதிதாக சேலம் மேற்கு தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது.


மேட்டூர், ஓமலூரில் பா.ம.க.,வை தோற்கடிக்க, அக்கட்சியினரே உள்ளடி வேலையில் இறங்கி உள்ளதாக தலைமைக்கு தகவல் எட்டியுள்ளது. எனவே, மணி தொகுதி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இரு தொகுதிகள் என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் பா.ம.க.,வினர் கூறி வருகின்றனர்.


-

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: