Sunday, March 13, 2011

தி.மு.க.,வுடன் தொகுதி உடன்பாடு மட்டும் தான் : ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் : ""தி.மு.க., கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் எதுவுமில்லை; நாங்கள் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்துள்ளோம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ""இந்த நேர்காணலில் தலைவர் மணி இல்லை. அவர், சென்னையில் தொகுதி ஒதுக்கீடு குறித்து தி.மு.க., வுடன் பேசி வருகிறார். காலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்து விட்டோம். இப்போது மதுரை மாவட்டம் நடக்கிறது,'' என்றார்.



பின் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:



கேள்வி: பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படுமா?
10 சதவீதம் பெண்கள் தான் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தொகுதி ஒதுக்கீடு, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு சீட் ஒதுக்கப்படும். வேட்பாளர்களாக புதுமுகங்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக இருக்கும்படி முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம்.



கேள்வி: நீங்கள் எத்தனை தொகுதி எழுதிக் கொடுத்துள்ளீர்கள்?
நிறைய தொகுதிகள் எழுதிக் கொடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் முடியும். நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.



கேள்வி: தேர்தல் காலத்தை நீட்டிக்கவில்லையே?
தேர்தல் காலத்தை, தேர்தல் கமிஷன் நீட்டிக்கவில்லை என்றாலும், தேர்தலை சந்திக்க பா.ம.க., தயாராக உள்ளது.



கேள்வி: தேர்தல் பிரசாரம் எப்போது துவக்குகிறீர்கள்?
தொகுதிகள் உடன்பாடு ஏற்பட்டவுடன்,தேர்தல் பிரசாரம் துவங்குகிறேன். முக்கிய நகரங்களில் கூட்டணியின் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடக்கும்.



கேள்வி: எதை முன்னிறுத்தி பிரசாரம் இருக்கும்?
பா.ம.க.,வின் கொள்கைகள், கருணாநிதியின் ஐந்த ஆண்டு கால சாதனைகள், தொடரும் சாதனைகள் குறித்த பிரசாரம் செய்வோம். குறிப்பாக கருணாநிதி ஆட்சியின் "இனியவை நாற்பது' குறித்து பிரசாரம் செய்வோம். தேவைப்பட்டால் எதிரணி ஆட்சியின் "இன்னா நாற்பது' குறித்தும் பிரசாரம் செய்வோம். ஒவ்வொரு குடும்பமும் கருணாநிதி ஆட்சியில் பயன் பெற்றுள்ளதை உணர்கின்றன. எனவே எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்.



கேள்வி: தி.மு.க., கூட்டணியில் குறைந்த பட்ச செயல் திட்டம் உள்ளதா?
விரைவில் பா.ம.க.,தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். குறைந்தபட்ச செயல் திட்டம் இல்லை. தி.மு.க.,வுடன், பா.ம.க.,தொகுதி உடன்பாடு தான் செய்துள்ளது.



கேள்வி: விலைவாசி உயர்ந்துள்ளதே?
மழைக்காலத்தில் பொருட்களின் விலை சற்று உயரத் தான் செய்யும். தற்போது அனைத்துப் பொருட்களின் விலையும் குறைந்து வருகிறது. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.



மகத்தான வெற்றி அன்புமணி பேட்டி : "பா.ம.க., உள்ள தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும்' என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.



தைலாபுரம் தோட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : இந்த தேர்தலில் பென்னாகரம் பார்முலாவை செயல்படுத்த உள்ளோம். மைக்ரோ பார்முலாவும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 60 சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்து, ஒரு ஆண்டுகாலமாக பணி செய்து வருகிறோம்; கட்சி பணி நன்றாக உள்ளது.இந்த தேர்தலில் பா.ம.க., இடம்பெற்றுள்ள தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றிப் பெறும்.இவ்வாறு அன்புமணி கூறினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: