Sunday, January 3, 2016

பெட்ரோல், டீசல் மீது ரூ.1.12 லட்சம் கோடி கூடுதல் வரியா? உடனே திரும்பப் பெறுக: ராமதாஸ்

 


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
’’பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 2.00 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. பொது மக்களுக்கு விலைக் குறைப்பு என்ற வடிவில் சென்றடைய வேண்டிய ரூ.17,200 கோடியை   கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானதாகும்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டது. இரக்கமே இல்லாமல் ஒரு மாதத்திற்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்ட வரலாறு உண்டு. இது பற்றி கேட்ட போதெல்லாம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் கூறிய ஒரே பதில்,‘‘ எரிபொருள் விலை உயர்வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டிலும் உயரும், உலக சந்தையில் குறைந்தால் உள்நாட்டிலும் குறையும் என்பது தான்’’. அவர்கள் கூறியவாறே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஆனால், உலக சந்தையில் விலை குறைந்த போது உள்நாட்டில் குறையவில்லை. எரிபொருள் விலை நிர்ணயத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறிய மத்திய அரசு, இப்போது கலால் வரி உயர்வின் மூலம் எரிபொருள் விலையை திரிப்பது ஏன்?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பின்னர் இதுவரை 7 முறை எரிபொருள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இடையில் சில முறை கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது  வரியைக் குறைத்து மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு     முன்வரவில்லை. மாறாக அப்போது விலையை உயர்த்தி மக்களின் சுமையை மத்திய அரசு அதிகரித்தது.  பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த ஓராண்டில் 7 கட்டங்களாக 7.73 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 7.83 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,12,832 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அவ்வளவும் அப்பாவி மக்களுக்கு சென்றடைய வேண்டியதாகும்.

உலக சந்தையில் கடந்த திசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 32.90 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு குறைந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 30.50 ரூபாய்க்கும், டீசல் 22.00 ரூபாய்க்கும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 59.77 ரூபாய்க்கும், டீசல் 46.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமோ, அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதன் அடக்க விலையை விட அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் உற்பத்திச் செலவு என்பது 20 ரூபாய்க்கும் குறைவு தான். அத்துடன் மத்திய, மாநில அரசு வரிகள், எண்ணெய் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் லாபம் சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.59.77 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு  வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட விற்பனை விலை 3 மடங்கு அதிகமாக இருப்பது மக்கள் மீது தொடுக்கப்படும் மிகப் பெரிய பொருளாதாரத் தாக்குதல் ஆகும். வருவாயை பெருக்குவதற்கான வரி ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அதையெல்லாம் செய்யாத மத்திய அரசு, அப்பாவி மக்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதி பெட்ரோல், டீசல் மீது வரிகளை திணிப்பது நியாயமற்றதாகும்.

மக்களின் உணர்வுகளை மதித்தும், கச்சா எண்ணெய் விலை உயர்வின் பயன்களை மக்களுக்கு வழங்கும் வகையிலும் கடந்த ஓராண்டில் மட்டும் விதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 12,832 கோடி ரூபாய் கூடுதல் கலால் வரியை உடனடியாக மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: