பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அவரை மாற்ற வேண்டும் என்று இப்போது தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மனு போட்டு உள்ளார்.
அவரையும் இந்த வழக்கில் இணைத்து கொள்ளும்படியாக மனு செய்து இருக்கிறார். இந்த வழக்கு இயல்பான முடிவை எட்டுவதற்கு அன்பழகனையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதுதான்.
ஜெயலலிதா எந்த பதவியையும் வகிக்க தகுதியில்லை என்ற நிலையில் தனது மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு என்ன தேவை? என்பதற்கு ஜெயலலிதாதான் விளக்கம் கூற வேண்டும்.
ஜெயலலிதா மீது இன்னொரு சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக விரைவில் கவர்னரை சந்தித்து மனு கொடுப்போம்.
மத்திய பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக கூறுகிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எதிர்க்கட்சிகளின் கடமை தவறை சுட்டிக் காட்டுவதுதான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளை எடுத்துச் சொல்வோம். அதற்கு தீர்வையும் சொல்வோம்.
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி உருவாக வேண்டும். எங்கள் தலைமையை யார் ஏற்றார்களோ அவர்களை ஏற்றுக் கொள்வோம்.
பா.ஜனதா தலைமையில் கூட்டணி ஏற்படும் என்பது அது அவர்களுடைய கருத்து. ஒருவேளை அவர்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகலாம். நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பது பற்றி விரைவில் பொதுக்குழுவை கூட்டி அறிவிப்போம்.
அன்புமணிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்காதது பற்றி எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறிப்பிட்டு சொன்னால் அவர் அமைச்சர் ஆக கூடாது என்றுதான் நாங்கள் விரும்பினோம்’’கூறினார்.
No comments:
Post a Comment