இந்தியாவின் 66 ஆவது குடியரசு நாளையொட்டி தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பந்தார அள்ளி ஊராட்சியில் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் கோ. மாதன் தலைமையேற்றார். தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பெண்கள் உட்பட அந்த கிராமத்து மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:
1. பந்தார அள்ளி கிராமத்திற்கு வருவதற்கான பாதையில் அமைந்துள்ள 2 மதுக்கடைகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, அந்த மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்.
2. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மதுக்கடைகள் அனைத்தையும் மூடி அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
3. தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ரூ.2000 கோடியில் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அத்திட்டத்தால் தண்ணீர் கிடைக்கவில்லை. பல கிராமங்களில் ஒருநாள் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் படி தண்ணீர் வழங்கப்பட்டால் அடுத்த நாள் கலங்கலான, அசுத்தமான நிலத்தடி நீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் இந்த திட்டத்தின் நோக்கமே சிதைந்து விட்டது. எனவே, கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழு அளவிலும், மக்களுக்கு பயன்தரும் வகையிலும் செயல்படுத்த வேண்டும்.
4. பந்தார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பல ஆதரவற்ற முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகை திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தருமபுரி மாவட்டத்தில் யாருக்கும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக குடும்ப அட்டைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-& இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களிடம் அப்பகுதி மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
No comments:
Post a Comment