Tuesday, January 20, 2015

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் கிடையாது: பாமக அறிவிப்பு

சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இடைத் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்றும் பாமக அறிவித்துள்ளது.பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பாமக தலைமை நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டதால் திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார்.இதையடுத்து காலியாகியுள்ள திருவரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் இன்று (20.01.2015) செவ்வாய்க் கிழமை மாலை நடைபெற்றது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். அந்தக் கூட்டத்தில் திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இடைத்தேர்தல்கள் தேவையற்றவை; இடைத் தேர்தல்களை நடத்துவதால் மக்களின் வரிப்பணமும், நேரமும் தான் வீணாகிறது என்ற நிலைப்பாட்டை பாட்டாளி மக்கள் கட்சி கடைபிடித்து வருகிறது. இதுவரை நடந்த இடைத் தேர்தல்களில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலைத் தவிர வேறு எதிலும் பா.ம.க. போட்டியிட்டதில்லை.ஏதேனும் ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியோ அல்லது மக்களவை உறுப்பினர் பதவியோ காலியானால், அங்கு இடைத் தேர்தல் நடத்துவதை விடுத்து, ஏற்கனவே அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே அப்பதவிக்கு நியமிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சியினர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். அரசு எந்திரமும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக முடுக்கி விடப்பட்டிருக்கிறது.ஏற்கனவே அரசு நிர்வாகம் செயலிழந்துள்ள நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டு பணத்தை வாரியிறைப்பார்கள் என்பதால் நிர்வாகம் முற்றிலுமாக செயலிழக்கும். மேலும், ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.2000 முதல் ரூ. 5000 வரை பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி இடைத் தேர்தல் என்ற பெயரில் ஜனநாயக படுகொலை நடத்த ஆளும்கட்சி திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.திருமங்கலம் முதல் ஆலந்தூர் வரை அனைத்து இடைத்தேர்தல்களும் இத்தகைய ஜனநாயகப் படுகொலைகளுக்கு அழிக்க முடியாத சாட்சியங்களாக விளங்குகின்றன.இத்தகைய சூழலில் திருவரங்கம் தொகுதி இடைத் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே, திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், இதில் போட்டியிடும் எந்தக் கட்சி வேட்பாளரையும் ஆதரிப்பதில்லை என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.அவதூறு வழக்கில் கோர்ட்டில் ராமதாஸ்முன்னதாக இன்று சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஜரானார்.பருப்பு கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீது, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராமதாஸ் இன்று நேரில் ஆஜரானார்.அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை சந்திக்க தயார். சட்ட ரீதியாக அதை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: