பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வந்த போதிலும், அத்திருநாள் முழுமையடையவில்லை. எந்த சக்தியாலும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொங்கல் திருநாளுடன் பின்னிப் பிணைந்த அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத அவல நிலை ஏற்பட்டிருப்பது தான் வருத்தம் தரும் இந்த சூழலுக்குக் காரணமாகும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். கடந்த 7 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு பல்வேறு வடிவங்களில் முட்டுக்கட்டைப் போடப்படுவதும், அதை சட்டப்போராட்டத்தின் மூலம் முறியடித்து போட்டிகளை நடத்துவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான சட்டப்போராட்டம், போட்டி நாளுக்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். சாதாரண காலத்திலேயே இவ்வளவு நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டதைக் கருத்தில் கொண்டு சட்டப்போராட்டத்தை இன்னும் முன்கூட்டியே தொடங்கி தீவிரமாக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், பெயரளவில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ததுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாக கருதி முந்தைய முதலமைச்சரும், அவரது அமைச்சரவை சகாக்களும் ஒதுங்கி, உறங்கி விட்டது தான் இன்றைய நிலைக்கு காரணமாகும்.
சிந்து வெளி நாகரிக காலத்திலேயே, அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘ஏறுதழுவல்’ எனப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பாரம்பரியம் மிக்க போட்டிகளுக்கு எதிராக எவ்வளவு வலிமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதையேற்று ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்திருக்கக்கூடாது. இல்லாத அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வாதங்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு வளர்ச்சிக்கு தடை போடப்படும் சூழலில், 4000 ஆண்டு கால பாரம்பரியத்தை வலுவில்லாத வாதங்களின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வந்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எண்ணற்ற காரணங்கள் இருக்கும் நிலையில், அவற்றை நீதிபதிகள் முன்பு எடுத்துரைத்து தடையை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மற்ற வழக்குகளில் காட்டிய ஆர்வத்தில் ஒரு துளியைக் கூட இவ்வழக்கில் காட்ட ஆட்சியாளர்கள் முன்வராதது தான் மிகப்பெரிய துரதிருஷ்டமாகும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 8 மாதங்கள் எதுவும் செய்யாமல், கடைசி 8 நாட்களில் தீவிரமாக செயல்படுவதைப் போல தமிழக அரசு காட்டிக் கொண்டது. அப்போது கூட தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தில்லி சென்று பிரதமரை சந்தித்து இந்தப் பிரச்சினையை விளக்கி தமிழக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வர வேண்டும் என்று அண்மையில் நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக முதலமைச்சரோ வழக்கம் போல் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக முதலமைச்சரின் அனைத்துக் கடிதங்களுக்கும் அளிக்கப்பட்ட மரியாதையையே அந்தக் கடிதத்திற்கும் மத்திய அரசு அளித்ததன் பயனாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை உருவாகிவிட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இல்லாத பொங்கல் திருவிழாவை தமிழக மக்கள் இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்காததால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் களையிழந்து கிடக்கின்றன. அதுவும் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் இந்த அவலம் நடந்திருப்பது கொடுமையானது. எந்த ஒரு நிகழ்வாலும் ஏற்படாத அளவுக்கு, மிகப்பெரிய மனக்காயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காதது மக்களின் உணர்வுகளை மதிக்காத செயல் என்றால், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டிய தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும். இனிவரும் நாட்களிலாவது மக்களின் மனக்காயங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மருந்து போட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment