Tuesday, January 13, 2015

ஜல்லிக்கட்டு போட்டியை எப்படியாவது நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிடுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் நேற்று நடத்திய பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற வினா எழுந்துள்ளது.

விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக 2007 ஆம் ஆண்டிலிருந்தே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது சிக்கலானதாக இருந்து வருகிறது. எனினும், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அனுமதி பெறுதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நெறிப்படுத்துவதற்கான சட்டம் இயற்றுதல் போன்ற நடவடிக்கைகளின் உதவியால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில்  07.05.2014 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டமும் செல்லாது என்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை உருவானது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை கோருவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவ்வழக்கை கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இதனால் இவ்வழக்கில் ஒருமுறை மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது. அதுமட்டுமின்றி,  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை யாருக்கும் ஆபத்து இல்லாமல்  பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழ்நாட்டில் செய்யப்பட்டிருக்கும் போதிலும், இந்தப் போட்டிகளை நடத்த எந்த அடிப்படையில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்பது தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் காலம்காலமாக நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில், அதை அகற்றுவதற்காகவும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை கடந்த 19.05.2014 அன்று தாக்கல் செய்த தமிழக அரசு, அதன்பின் 8 மாதங்கள் ஆகியும் அம்மனுவை விசாரணைக்கு கொண்டு வந்து சாதகமான தீர்ப்பைப் பெறவும், அதனடிப்படையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசியல் பழிவாங்கல் வழக்குகளாக இருந்தால்  நீதிபதிகளின் வீடுகளுக்கே அரசு வழக்கறிஞர்கள் படையை அனுப்பி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக அரசு, இந்த வழக்கில் நீதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்காதது தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதில் அதற்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் அரசு  செயல்படவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக 8 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு, இப்போது அதிகாரிகள் குழுவை தில்லிக்கு அனுப்பி, பழக்கப்பட்ட விலங்குகளை காட்சிப்படுத்துதல் என்ற பிரிவில் இடம்பெற்றிருக்கும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கிறது. ஆனால், காலம் கடந்து விட்டதாகக் கூறி தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

அதேநேரத்தில் இன்னும் கூட காலம் கடந்து விடவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டில் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஒருநாள் முன்பாக 15.01.2008 அன்று தான் உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது. அடுத்த நாளே பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. 

அதேபோல், இப்போதும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இப்பிரச்சினையை நேரடியாக தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டு உடனடியாக பிரதமரை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்; மற்றொரு புறம் தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்து சாதகமான தீர்ப்பை பெற முயல வேண்டும் என்பன உட்பட ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ அவை அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் மாட்டுப்பொங்கல் அன்று பாலமேட்டில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: