சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் மக்கள் நலப்பணியாளர்கள் மீது மனிதாபிமானம் காட்டுவதற்குக் கூட தயாராக இல்லை என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 09.09.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால், அவர்களின் வாழ்விலும் விளக்கேற்றப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் என்று மனித நேயமுள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மோசமாக பாதிக்கப்படுவது மக்கள் நலப் பணியாளர்கள் தான். வழக்கம் போலவே இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்களைத் தான் முதலமைச்சர் ஜெயலலிதா பணி நீக்கம் செய்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்ற பல்வேறு நீதிமன்றங்களின் கதவைத் தட்டிய மக்கள் நலப்பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி தான் நீதி கிடைத்தது.
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும், அவர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத இறுதிக்குள் அரசு வேலை வழங்கப்பட வேண்டும் அல்லது ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அவர்களுக்கு எப்படியெல்லாம் வேலை வழங்கலாம் என்பதற்கான யோசனைகளையும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அவை அனைத்தையும் நிராகரித்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் மக்கள் நலப்பணியாளர்கள் மீது மனிதாபிமானம் காட்டுவதற்குக் கூட தயாராக இல்லை என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மக்கள் நலப்பணியாளர்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்கள்; அவர்களின் ஊதியத்தை தான் அவர்களின் குடும்பங்கள் நம்பியிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் வாடும் மக்கள் நலப்பணியாளர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையிலாவது மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை வழங்குவது தான் சட்டப்படியாகவும், தார்மீகரீதியாகவும் சரியானதாக இருக்கும்.
ஆனால், ஊழல் குற்றச்சாற்றுகளின் காரணமாக பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்குவதையும், திறமையான அதிகாரிகள் எத்தனையோ பேர் பணியில் இருக்கும்போது ஓய்வு பெற்ற இ.ஆ.ப., மற்றும் இ.கா.ப. அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு மற்றும் புதிய பதவி வழங்குவதையும், அ.தி.மு.க.வினருக்கு வேலை வழங்குவதற்காக சிறப்புக் காவல் படையை உருவாக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர், இந்த அப்பாவிகளுக்கு மட்டும் பணி வழங்க மறுக்கிறார். இவ்வளவு கடுமையாக பழிவாங்கப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் என்ன? என்பது தான் விடை தெரியாத வினா.
எங்கெல்லாம் காலிப்பணியிடங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் நலப்பணியாளர்களில் தகுதியுடையவர்களை நியமியுங்கள்; இல்லாவிட்டால் மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யும் பணியிலாவது அவர்களை ஈடுபடுத்துங்கள் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அதை மதித்து செயல்படுத்த அரசு தயாராக இல்லை. ஏற்கனவே இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்காக கொண்டு செல்லப்பட்டு, உச்சநீதிமன்ற அறிவுரைப்படி தான் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக மேல்முறையீடு செய்திருப்பதிலிருந்தே அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தை கவுரவ பிரச்சினையாகவோ அல்லது மக்கள் நலப் பணியாளர்களை விரோதிகளாகவோ பார்க்காமல் கருணையுடன் இப்பிரச்சினையை தமிழக அரசு அணுக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப் பெற்று, உயர்நீதிமன்ற அறிவுரைப்படி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment