பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கந்து வட்டியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்திருக்கிறது. கந்துவட்டிக் கொடுமைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, கந்து வட்டிக்காரர்களை குண்டர் சட்டத்தில் ஏன் கைது செய்யக்கூடாது? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஓட்டாண்டிகள் ஆக்குவதுடன், உயிரையும் பறிக்கும் கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட எவரேனும் வருவார்களா? என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடியான யோசனையை தெரிவித்திருக்கிறது. உயர்நீதி மன்றத்தின் இந்த யோசனை பாராட்டத்தக்கது மட்டுமின்றி, உடனடியாக செயல்படுத்தத் தக்கதுமாகும்.
தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு முதல் காரணம் மது என்றால், இரண்டாவது காரணம் கந்து வட்டி தான் என்பதில் மிகையில்லை. குடிகாரர்களை மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தையும் மது எப்படி பாதிக்கிறதோ, அதேபோல் கந்துவட்டியும் அதை வாங்கியோரை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் நிலப்பறிப்பு என்ற புதிய கலாச்சாரம் உருவானதற்குக் காரணமே கந்துவட்டி தான். வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் அதைக் கட்ட முடியாமல் திணறும்போது, கந்துவட்டிக்காரர்கள் அவர்களை மிரட்டி நிலம், வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை பறிக்கும் கொடுமை தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
தின வட்டி, மணி வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி எனப் புதுப்புது பெயர்களில் வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டிக்காரர்கள், கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதற்காக அனைத்து வகையான சட்ட விரோத செயல்களையும் கையாளுகின்றனர்.
பிழைப்புக்காக வியாபாரம் செய்யும் ஏழை மக்கள், அதற்கான முதலீடு இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்குவதும், அதற்கான வட்டியாக ஈட்டிய வருமானம் முழுவதையும் வட்டியாகக் கொடுத்துவிட்டு, அதற்கு மேலும் தருவதற்கு எதுவும் இல்லாததால் கந்துவட்டிக்காரர்களிடம் கொத்தடிமையாக வேலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
பல தருணங்களில் கொடுத்த கடனை திரும்ப செலுத்த முடியாதவர்களின் சிறுநீரகத்தை கட்டாயப்படுத்தி அகற்றி விற்பனை செய்து பணத்தை திருப்பி வசூலித்த கொடூரங்களும் அரங்கேறியிருக்கின்றன.
கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டுவதில் உயர்நீதிமன்றத்திற்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இருக்கிறதா? என்றால்..... இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். அதனால் தான் தமிழகத்தில் கந்து வட்டி தடைச் சட்டம் பல ஆண்டுகளாக இருக்கும்போதிலும், அதைப் பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க தமிழக அரசு முழு மனதுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் கந்துவட்டிக்கொடுமை தாங்க முடியாமல் கடந்த 5 ஆண்டுகளில் 604 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கந்துவட்டிக் கொடுமை எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.
கந்துவட்டித் தடை சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது. கடுமையான நடவடிக்கைகளின் மூலம் தான் கந்துவட்டியை ஒழிக்க முடியும். எனவே, உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்று கந்து வட்டிக்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் குண்டர் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதேநேரத்தில், இச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதை தடுப்பதற்கான பிரிவுகள் அதில் சேர்க்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, வாழ்வாதாரம் இல்லாத ஏழைகள் தொழில் செய்வதற்கு மூலதனம் இல்லாததால் தான் கந்துவட்டி பொறியில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கு தொழில் தொடங்க வசதியாக வட்டியில்லாமலோ அல்லது குறைந்த வட்டியிலோ வங்கிக்கடன் வழங்கி அதன் மூலம் கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டவும், ஏழை மக்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment