பா.ம.க. நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகம் செய்திருக்கிறது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் ஆசிரியர் வேலை பெற முடியாமல் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து தவறான அணுகு முறையையே கடைபிடித்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே, மத்திய அரசு விதிகளை காரணம் காட்டி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை ரத்து செய்துவிட்டு, போட்டித்தேர்வு மற்றும் தகுதித்தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வந்தது. மத்திய அரசு நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆந்திரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் நடத்தும் தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப்பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சமூக நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழகத்தில் உள்ள மற்ற அமைப்புகளும் குரல் கொடுத்தன. இதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5 விழுக்காடு குறைத்த தமிழக அரசு, அதற்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை தான் 10 ஆண்டுகளுக்கு முன் பட்டப்படி ப்பு படித்த ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்று விதி இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித்தேர்வு மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
அதேநேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. உதாரணமாக அண்மையில் நடந்த தகுதித்தேர்வில் 150க்கு 110 மதிப்பெண் பெற்ற பழைய மாணவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் 150க்கு 85 மதிப்பெண் பெற்ற புதிய மாணவர்களுக்கு வெயிட்டே ஜ் மதிப்பெண் உதவியுடன் வேலை கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களை விட உய ர்ந்த நிலையில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய முறையை கடைபிடிப்பது சரியல்ல.
வேலைவாய்ப்பில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்திக் கைதாகி வருகின்றனர். முதலமைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்த 4 பேர் நேற்று முன்தினம் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளனர். இதற்குப்பிறகும் அரசு மனமிறங்கி இவர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது ஜனநாயக செயல்பாடாக தோன்றவில்லை.
ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment