Tuesday, September 16, 2014

சகாயம் குழுவுக்கு தடை கோரி கனிம கொள்ளைக்கு துணை போவதா? : ராமதாஸ் கண்டனம்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்த இ.ஆ.ப. அதிகாரி சகாயம் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்தும் சகாயம் குழு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்கள் பற்றி அம்மாவட்ட ஆட்சியர் சகாயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கை வெளியானதுமே இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனையிட அம்மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் ஆசஷ்குமார் ஆணையிட்ட போதும், தாது மணல் கொள்ளை குறித்து நடுவண் புலனாய்வு விசாரணை தேவை என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். ஆனால், இந்த இரு தருணங்களிலுமே நடுவண் புலனாய்வு விசாரணைக்கு ஆணையிட முன்வராத தமிழக அரசு, நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் இருவரையும் இடமாற்றம் செய்து முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர்த்தியது.

தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், ஆரம்பத்திலிருந்தே இந்த ஊழல்களை மூடிமறைப்பதில் தான் அரசு தீவிரம் காட்டி வருகிறதே தவிர, விசாரணை நடத்தி உண்மையைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது கூட நேர்மையான அதிகாரி என்று கூறப்படும் சகாயம் விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவந்துவிடுமோ? என்ற அச்சத்தில் தான் இந்த விசாரணைக்கு தடை வாங்க தமிழக அரசு துடிக்கிறது. 

வழக்கமாக அரசோ அல்லது நீதிமன்றமோ ஒரு விசாரணைக்கு ஆணையிட்டால், ஏதேனும் தவறு செய்து, அதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்கள் தான் இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போட துடிப்பார்கள். ஆனால், இயற்கை வளங்களை கொள்ளை அடித்தவர்களே அமைதியாக இருக்கும் போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழக அரசே களமிறங்கியிருப்பதைக் கண்டு நேர்மையில் நம்பிக்கைக் கொண்டோர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

கனிமக் கொள்ளை தொடர்பாக வருவாய்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருவதாகவும், இந்நிலையில் சகாயம் குழுவும் விசாரணை நடத்தினால் கால தாமதம் ஆகும் என்றும் கூறித் தான் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியிருக்கிறது. உண்மையில் தமிழக அரசின் இந்த வாதம் ‘ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது. 

கனிமக்கொள்ளை குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்; கனிமக் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. அதனால் தான் 2 மாதங்களில் விசாரணையை முடித்து அதன் அறிக்கையை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி சகாம் குழுவுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். அதன்படி, இந்த வழக்கு அடுத்து எந்த திசையில் நகரத் தொடங்கும் என்பது அடுத்த மாத இறுதிக்குள் தெளிவாகத் தெரிந்து விடும்.

ஆனால், அரசுத் தரப்பு விசாரணையோ, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் கிரானைட் ஊழல் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதில் தொடங்கி 30 மாதங்கள் ஆகியும் இழுபறியாகவே உள்ளது. மதுரையில் பறிமுதல் செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் இதுவரை ஏலத்தில் விடப்படவில்லை. இன்னொரு புறம், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய வருவாய்த்துறைச் செயலாளர் ககன்தீப்சிங்பேடி தலைமையிலான குழு, அதன் அறிக்கையை தாக்கல் செய்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட போதிலும் அதை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. 

அடுத்த கட்டமாக விரிவான அறிக்கையை  ககன்தீப்சிங் பேடி குழு தயாரித்து பல மாதங்களாகியும் அதை தமிழக அரசு இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. ககன்தீப்சிங் குழுவின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்; அதன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரைக் கிளையும் பல முறை ஆணையிட்டும் அவற்றை தமிழக அரசு மதிக்கவில்லை. இப்படியெல்லாம் விசாரணையை தாமதப்படுத்தி கனிமக் கொள்ளையருக்கு துணை போகும் தமிழக அரசு, சகாயம் குழு விசாரணையால் கால தாமதம் ஆகும் என்று கூறுவதைக் கேட்கும்போது நகைப்பு கலந்த வேதனை தான் ஏற்படுகிறது.

மடியில் கனமில்லையேல் வழியில் பயமில்லை என்பதற்கேற்ப, இந்த பிரச்சினையில் தமிழக அரசு மீது தவறு எதுவும் இல்லாவிட்டால் சகாயம் குழுவின் விசாரணையை நினைத்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே, சகாயம் குழு விசாரணைக்கு தடை கேட்டு, இயற்கை வள கொள்ளையர்கள் தப்பிக்கத் துணை போவதை விடுத்து, இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து கனிம வளத்தை காக்கவும், கனிம கொள்ளையர்களை தண்டிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: