பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 76 பேர் கடந்த 2 வாரங்களில் பல்வேறு காலகட்டங்களில் சிங்களப்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சொந்தமான படகுகள் மற்றும் அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் உட்பட மொத்தம் 72 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து பிடித்து வைத்திருக்கிறது.
யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை துறைமுகத்தில் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் தொடர் மழை, கடும் வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது; மற்றொரு புறம் தமிழக மீனவர்களின் படகுகளை சிங்களப் படையினர் திட்டமிட்டே உதைத்து சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இவ்வாறு சேதப்படுத்தப்பட்ட படகுகளை இலங்கை அரசு அண்மையில் ரூ.8 லட்சத்திற்கு சிங்கள வணிகர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்திருக்கிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் படகுகளை இழந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மழை மற்றும் வெயிலால் சேதமடைந்துவிட்டன என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் சிங்கள மீனவர்களும் படகுகளுடன் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட நிலைமை ஒருபோதும் ஏற்படுவதில்லை. ஆந்திராவில் கைது செய்து வைக்கப்பட்டி ருந்த இலங்கை மீனவர்கள் 23 பேர் அவர்களது 4 படகுகளுடன் கடந்த ஆகஸ்ட் 29–ந்தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
காக்கிநாடா துறைமுகத்தில் இரு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களின் படகுகள் பொலிவு மாறாமல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்தப் படகுகளில் தான் அவர்கள் 1,000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து காங்கேசன்துறை துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர். அதேபோல் தமிழக எல்லைப் பகுதிகளில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான படகுகளும் சென்னை உள்ளிட்ட இடங்களில் மிக பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழக மீனவர்களின் படகுகளை திட்டமிட்டு உடைத்து சேதப்படுத்தி விட்டு, இயற்கை மீது பழி போடும் இலங்கை அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சிங்கள அரசு அதற்காக சட்ட விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட மீன்பிடி ஏற்பாடுகள் தொடர்பான திட்டத்தில், இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் இந்திய மீனவர்கள் நுழையத் தடையில்லை என்றும், அவ்வாறு நுழையும் மீனவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி மீனவர்களை 90 நாட்கள் வரை சிறையிலடைத்து கொடுமைப்படுத்தி வந்த ராஜபக்சே அரசு, இப்போது தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அவர்களை பிழைப்பற்றவர்களாக்கி முடக்கியிருக்கிறது.
72 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் நாகை முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். ஆனால், இதையெல்லாம் உணராத மத்திய, மாநில அரசுகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றன. மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்த மத்திய ஆட்சியாளர்கள், இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
மீனவர்களின் படகுகளை திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரசுக்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்; சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகளை வாங்க இழப்பீடு தர வேண்டும் என எச்சரிக்க வேண்டும். இதை தமிழக அரசும், மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment