செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இன்று மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று காலை வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் இணைக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. இந்த நாள் இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகின் விண்வெளி வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகும்.
கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிஹோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் சரியாக 323 நாட்களில் 67 கிலோ மீட்டர் தொலைவை கடந்து செவ்வாய் கிரகத்தை சுற்றி வரத் தொடங்கியிருக்கிறது.
செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை எட்டிப்பிடிக்கும் சாதனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த சாதனையை ஏற்கனவே படைத்திருக்கின்றன. ஆனாலும், அவையெல்லாம் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகே இந்த சாதனையை படைக்க முடிந்தது. ஆனால், இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக சுற்றி உலகையே வியக்க வைத்திருக்கிறது.
மங்கள்யான் இயக்கம் தான் உலகிலேயே மிகக்குறைந்த காலத்திலும், மிகக் குறைந்த செலவிலும் தயாரித்து இயக்கப்பட்ட விண்கல இயக்கம் ஆகும். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அதன் கியூரியாசிட்டி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப ரூ.12,000 கோடி செலவாகியுள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகளோ அதைவிட 30 மடங்கு குறைவாக ரூ450 கோடி செலவில் சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்கள்.
செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை எட்டியுள்ள மங்கள்யான் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருப்பதுடன், அதே பாதையில் சுற்றிவரும் அமெரிக்க விண்கலத்துடனும் டுவிட்டர் மூலமும் உரையாடி உள்ளது. சந்திரனில் நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத உண்மைகளை இந்தியாவின் சந்திரயான் கண்டுபிடித்ததைப் போல செவ்வாய் கிரகத்தின் மர்மங்களை உடைத்து, அங்கு மனிதர்களை வாழ வைப்பதற்கான ஆராய்ச்சியில் ஒட்டுமொத்த உலகிற்கும் மங்கள்யான் வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவை சூரியனை விட அதிக உயரத்திற்கு கொண்டு சென்றுள்ள இந்த சாதனைக்கு சொந்தக்காரர்களான இந்திய விஞ்ஞானிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த சாதனையில் பங்கேற்ற விஞ்ஞானிகளில் மயில்சாமி அண்ணாதுரை, சுப்பையா அருணன், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் தமிழர்கள் என்பது நமக்கெல்லாம் கூடுதல் பெருமை ஆகும்.
மங்கள்யான் சாதனையை சாத்தியமாக்கிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மங்கள்யானை செவ்வாய்கிரக சுற்றுவட்டப் பாதையில் இணைத்த விஞ்ஞானிகளை உடனிருந்து ஊக்கப்படுத்திய பிரதமரும், விண்வெளி ஆராய்ச்சித்துறை அமைச்சருமான நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment