Saturday, September 27, 2014

சொத்து வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை: நீதி இன்னும் வாழ்கிறது: ராமதாஸ் அறிக்கை


 சொத்து வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை: நீதி இன்னும் வாழ்கிறது என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளது, 

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடிகளும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சர் பதவியிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டுள்ளார்; அமைச்சரவையும் அதிகாரமிழந்து விட்டது. தண்டனையின் அளவு 3ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பதால் ஜெயலலிதா உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 1996 ஆம் ஆண்டு தொடரப்பட்டதாகும். 18.09.1996 அன்று இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் பின் 18 ஆண்டுகளும், 9 நாட்களும் கழித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கை  புதைகுழிக்கு அனுப்பி, சட்டத்தின் ஆட்சிக்கும், நீதிக்கும் சாவுமணி அடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சிகள் விசாரணை கிட்டத்தட்ட  முடிவடைந்துவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வந்ததையடுத்து ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 77 சாட்சிகளை மறுவிசாரணை என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு அழைத்து பிறழ் சாட்சியம் அளிக்க வைத்த நிகழ்வு அரங்கேறியது. அதன்பின் 2003 ஆம் ஆண்டில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகும், விசாரணையை தாமதப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையே நடைபெறாததால், நீதிமன்றத்தில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட கைதி போல அமர்ந்திருக்கிறேன்’’ என்று இவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான பச்சாபுரே நீதிமன்றத்திலேயே வேதனையுடன் கூறினார். 

‘‘மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் ஒருவரால் 5 ஆண்டுகளில் ரூ.66 கோடிக்கு எவ்வாறு சொத்து சேர்க்க முடிந்தது என்ற எளிமையான இவ்வழக்கை ஜெயலலிதாவால் 16 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடிகிறது என்றால் அது இந்தியாவின் சாபக்கேடு’’ என்று இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நியமிக்கப்பட்ட ஆச்சாரியா கூறினார். இதிலிருந்தே இவ்வழக்கை சிதைக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதை அறியலாம்.

அதுமட்டுமின்றி இவ்வழக்கின் நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் தமது விருப்பப்படி தான் நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிசயமும் நடந்தது. இவ்வழக்கை மிகவும் நேர்மையாக நடத்திச் செல்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா மீது அவதூறு குற்றச்சாற்றுகளை சுமத்தி, அவரைக் காயப்படுத்தி பதவி விலக வைத்த கொடுமையும் அரங்கேறியது. இப்போது கூட தீர்ப்பளிக்கும் நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க.  நிர்வாகிகளை பெங்களூரில் குவித்து நீதிமன்றத்தை பணிய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இத்தனைக்குப் பிறகும் இந்த வழக்கில் இப்போது அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்தையும், நீதியையும் எப்போதும் வளைத்துவிட முடியாது; நீதி இன்னும் வாழ்கிறது என்பதையே காட்டுகிறது. தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்; ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் நீதி தரம் குறையாமல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை சரியான பாடமாக அமையும். எனவே, சொத்து வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன்.

சொத்து வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டங்களைத் தொடங்கிவிட்டனர். பல இடங்களில்  பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டிருப்பதுடன், பல பேரூந்துகளுக்கு தீ வைக்கப் பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. திறந்திருக்கும் கடைகளை அ.தி.மு.க.வினர் சூறையாடி வருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. முக்கிய சாலைகளில் பாதுகாப்பிற்காக காவலர்களை காண முடியவில்லை. அ.தி.மு.கவினரின் வன்முறையும், அதற்கு துணைபோகும் காவல்துறையினரின் செயல்பாடுகளும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

தமிழகத்தில் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட போது தருமபுரியில் வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் உயிருடன் கொளுத்தப்பட்டது போன்ற வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு இல்லாத நிலையில் தமிழக ஆளுனரும்,  தலைமைச்செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் சட்டம் &ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: