தமிழகத்தில் முழு மதுவிலக்குக் கோரி அக்டோர் 2ம் தேதி மகளிர் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
அண்டை மாநிலமான கேரளத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு தொடங்கியிருக்கிறது. இதற்கு எதிராக அங்குள்ள குடிப்பகங்களின் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் போதிலும், கடுமையான சட்டப் போராட்டம் நடத்தியாவது மது அரக்கனை ஒழித்துவிட வேண்டும் என்பதில் அம்மாநில முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்; மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள போதிலும் அவையெல்லாம் செயல்படுத்தப்படவில்லை. அதற்கெல்லாம் முன்பாக பா.ம.க. தொடர்ந்த வழக்கில் நெடுஞ்சாலை ஓரங்களிலுள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் சாலைகளில் மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மனித குலத்தை அழிவுப்பாதையை நோக்கி வேகமாக அழைத்துச் செல்லும் மதுவை ஒழித்து தமிழகத்தின் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம் ஆகும். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் பங்கேற்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறும். எனது தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த போராட்டத்தில் மதுவால் பாதிக்கப்பட்ட பெண்களும், மதுவிலக்குக்கு ஆதரவானவர்களும் பெருமளவில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment