Sunday, March 31, 2013

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம்: ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில்,

உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலுவையில் மரித்து, பின்னர் இன்று உயிர்த்தெழுந்த இயேசு உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றி முழுமையான மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்புவாராக என வாழ்த்துகிறேன்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது.

இயேசு பிரானின் வாக்குப்படி, தமிழக மக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்கள் அனைத்தும் வெகுவிரைவில் நீங்கி, விடிவுகாலம் பிறக்கும் ; ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப்படுவதுடன், இனப்படுகொலையை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்; -அதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்ற புதிய நம்பிக்கையுடன் இந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாட வாழ்த்துகிறேன்.

தலையில் முள்முடி; பாரமான சிலுவை; அந்தச் சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை; இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இறைவனிடம் இயேசு மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம். அவரது உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ்வோம் என இந்த நன்னாளில் சூளுரைத்துச் செயல்படுவோம்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: