Sunday, March 3, 2013

தர்மபுரி ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

புதுச்சேரி: தர்மபுரியில் நடந்த ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புதுச்சேரியில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் 2 முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். எஸ.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சில திருத்தங்கள் வேண்டும். பல மாவட்டங்களில் இந்த சட்டம் தேவையில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் திருத்தங்கள்தான் கேட்கிறோம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

சில சமுதாய தலைவர்கள் இளைஞர்களை காதல் செய்ய தூண்டுகிறார்கள். டீன் ஏஜ் என்பது காமவலையில் விழும் பருவம். அந்த நேரத்தில் மாணவிகள் பின்னால் சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சுற்றுகிறார்கள். சில நாளில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவி வீட்டிற்கு வரமாட்டாள். அப்போது அந்த மாணவி ஓடிப்போய்விட்டாள் என்று தகவல் வரும். இந்த வலி அனுபவப்பட்ட குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.

இதை இப்படியே விட்டால் வருங்காலத்தில் இன்னும் வலி அதிகரிக்கும். இந்த வேலையை நான் தொடங்கியதும் சிலர் இதை நீங்கள் 10 வருடத்துக்கு முன்பே செய்திருக்கலாம் என்றார்கள். தந்தை பெரியார் கூட பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பக்தவச்சலம், கோவிந்தராஜ் அடங்கிய பெஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஒரு பெண் 21 வயது ஆகும்போதுதான் மேஜர் ஆகிறாள் அதற்கு முன்பு இல்லை என்று கூறியுள்ளது. 21 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலிக்கும் ஆண் வாழ்க்கைக்கு ஏற்றவனா என்று தீர்மானிப்பது கிடையாது.

ஹார்மோன்கள் தூண்டுதலால் திருமணம் செய்துவிட்டு பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்ட திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளனர். 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்தால் பெற்றோர் ஒப்புதல் பெறவேண்டும். இல்லையேல் அத்தகைய திருமணம் செல்லாது, அல்லது ரத்து செய்யலாம் என்றும் இந்த தீர்ப்பினை நாடாளுமன்றச் செயலாளருக்கும் அனுப்பிவைக்க கூறியுள்ளனர்.

நாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டம் அல்ல. அவர்களுக்கு வழிகாட்டுவதாக கூறி சில தலைவர்கள் தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை நன்கு படிக்க சொல்லுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றுங்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைகளில் ஈடுபடவேண்டாம். பிறர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குபோட்டு அலைக்கழிக்க வேண்டாம்.

எங்களது ஏப்ரல் மாத ஆர்ப்பட்டத்துக்குப்பின் மத்திய மாநில அரசுகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 32 அமைப்புகளை தவிர 81 சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களின் வேலை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்தான். இதில் எங்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. எங்களின் இந்த இயக்கத்துக்கு பக்கபலமாக அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களில் சிலர் எங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். 81 சதவீத மக்கள் ஒட்டுமொத்தமாக கூறும்போது, அவர்கள் எங்கள் வழிக்கு வந்தே ஆக வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு கொடுக்கும் கூட்டத்தை கண்டு காவல்துறையே பயப்படுகிறது. வட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் இல்லாததால் அங்கு சாதிக் கலவரங்கள் இல்லை என்றார் ராமதாஸ்.

கேள்வி: இது போன்ற சாதிக் கூட்டங்களில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லையே?

ராமதாஸ்: பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆதரிக்கின்றனர். ஆனால் எங்கள் கட்சியில் இதை பேச முடியாது. நீங்கள் பேசுங்கள் என்று எங்களை முன்னுக்கு தள்ளுவது அவர்கள்தான்.

கேள்வி: தருமபுரியில் ஜாதி கலவரம் நடைபெற்ற பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு உங்களை மையப்படுத்தியா?

ராமதாஸ்: 144 தடை உத்தரவு போடப்பட்டால் நான் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவரும் அப்பகுதிக்கு செல்ல முடியாது. தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: