பெட்ரோல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 01.03.2013 வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதிதான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50, டீசல் விலை 50 காசுகளும் உயர்த்தப்பட்டன.
அடுத்த 12 நாள்களிலேயே மீண்டும் விலை உயர்த்தியிருப்பது எந்த நீதிக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துள்ள மனிதநேயமற்ற பொருளாதார குற்றமாகும்.
2009 ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 44.24 ஆக இருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 113.86 டாலரிலிருந்து 109.74 டாலராக குறைந்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெயின் விலை 128 டாலரிலிருந்து 131 டாலராக உயர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறது.
இதைப் பார்க்கும்போது எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்துக்காக பொய்யான புள்ளி விவரங்களை அளிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.
மேலும் பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வதுடன், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment