Saturday, March 23, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை இனப்படுகொலைகளுக்காக இராஜபக்சேவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து, தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி வந்த மத்திய அரசு, இந்த இரண்டையுமே செய்யாமல் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. இதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும், அதற்காக தமிழர்களும், தமிழக மாணவர்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம் வீணாகி விடாது.
இராஜபக்சே தண்டிக்கப்படும் வரை தமிழகத்தின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடரும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தப்பித்துக்கொண்ட இலங்கை, அடுத்ததாக உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்வது தான் இராஜபக்சேவின் நோக்கமாகும்.
ஆனால், ஓர் இனத்தையே அழித்துவிட்டு உத்தமர் வேடம் போட முயலும் இராஜபக்சேவின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்ற எண்ணத்தில், இலங்கையில் தமிழர்கள் விரும்பும் மாற்றம் ஏற்படாத நிலையில், கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். அதேபோல் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசியாரும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் இம்மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டிய இந்தியாவோ, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக இலங்கைக்கு உதவி வருகிறது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காமன்வெல்த் அமைப்பிலிருந்து அந்நாடு பலமுறை நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியா, தற்போது கொலைகார நாடான இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை விடுத்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு, இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழகத்திற்கு உள்ளது. இதுவரை இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்த தமிழக மக்களும், மாணவர்களும், இனி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் & காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட வேண்டும்.
மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வகையில், நாட்டையே உலுக்கும் அளவுக்கு இப்போராட்டம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: