பா.ம.க. நிறுவனர் மருத்துவர்
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மாநகரில் போக்குவரத்து
நெரிசல் அதிகரித்து வருவதையும், கோயம்பேடு பேரூந்து நிலையம் நிரம்பி வழிவதையும்
கருத்தில் கொண்டு சென்னையை அடுத்த வண்டலூரில் மிகப் பெரிய புறநகர் பேரூந்து
நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
இதற்காக வண்டலூரில் சுமார் 65
ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக
கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு புறநகர் பேரூந்து
நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில்,
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புறநகர் பகுதியில் புதிய பேரூந்து நிலையம் அமைக்க
அரசு முடிவு செய்திருப்பது சரியானது தான்.
ஆனால், புதிய பேரூந்து நிலையம்
அமைப்பதற்காக பாசன வசதி கொண்ட வளமான விளைநிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முடிவு
செய்திருப்பது தான் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
புதிய பேரூந்து நிலையம்
அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலம் தான் அப்பகுதியிலுள்ள 1200க்கும் அதிகமான
குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்துக்கும்
விவசாயத்தைத் தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது.
இந்த நிலையில் இவர்களின்
வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், அவர்களுக்கு உணவளித்து வந்த விளைநிலங்களை கையகப்
படுத்த முயல்வது கண்டிக்கத் தக்கது.
புதிய புறநகர் பேரூந்து நிலையம்
அமைக்கப்படவுள்ள வண்டலூருக்கு மிக அருகிலேயே கொளப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமாக
100 ஏக்கருக்கும் அதிகமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன்
பேரூந்து நிலையத்தை அமைக்க முடியும். அதை விடுத்து வேளான் விளைநிலங்களை கைப்பற்ற
அரசு முயல்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழகம் முழுவதும் குறிப்பாக, வட
மாவட்டங்களில் விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து
வருகிறது. இதனால் நெல் உற்பத்தி குறைந்துவரும் நிலையில், இருக்கும்
விளைநிலங்களையும் அரசே பறிக்க முயல்வது நியாயமற்றது.
எனவே, மாநிலத்தின் உணவு
பாதுகாப்பு, 1200 குடும்பங்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
வண்டலூரில் வேளான் விளைநிலங்களை கையகப்படுத்தி புதிய பேரூந்து நிலையம் அமைக்கும்
திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மாறாக கொளப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில்
உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் புதிய பேரூந்து நிலையத்தை அமைப்பது குறித்து
ஆராய வேண்டும்.
இல்லாவிட்டால் ஏழை மக்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அப்பகுதி மக்களைத் திரட்டி பா.ம.க. மிகப்பெரிய
போராட்டத்தை நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.
No comments:
Post a Comment