Thursday, March 28, 2013

மதுவிலக்கெல்லாம் அதிமுகவால் முடியாது, அதுக்கெல்லாம அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்க - ராமதாஸ்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கலையரசு, சமூகத்தின் மீதான அக்கறையுடன், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைபாக்கிற்கு விலை சொல்வதைப் போல, கேட்கப்பட்ட கேள்வியை விட்டுவிட்டு, மாமல்லபுரத்தில் வன்னிய இளைஞர் பெருவிழா நடந்த போது அந்த பகுதியில் கூடுதலாக ரூ.50 லட்சத்திற்கு மது விற்பனை ஆனதாக எந்த அடிப்படையும் இல்லாத, ஓர் அவதூறை அவையில் கூறியிருக்கிறார்.
அதன்பின் மற்றொரு பா.ம.க. உறுப்பினர் கணேஷ் குமார் இப்பிரச்சினையை நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் எழுப்பியபோதும், இம்முறையாவது மாமல்லபுரம் இளைஞர் பெருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் மது அருந்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சாத்தான் வேதம் ஓதுவதைப் போல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், உழைக்கும் பாட்டாளி சமுதாயத்தை குடிகார சமுதாயம் என்று அவர் அவமரியாதை செய்திருக்கிறார். அமைச்சரின் இந்த வாய்நீளப் பேச்சு கடுமையாக கண்டிக்கத் தக்கது. ‘‘பதவி வரும் போது பணிவும் வரவேண்டும்... துணிவும் வர வேண்டும்'' என்பது எம்.ஜி.ஆர். நடித்த ஒரு பாடலின் வரியாகும். ஆனால், எம்.ஜி.ஆரின் வழிவந்ததாகக் கூறிக் கொள்ளும் அ.தி.மு.கவினர் அவையில் காட்ட வேண்டிய பணிவும், மது ஒழிப்பில் காட்ட வேண்டிய துணிவும் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இந்த இரண்டும் இல்லாதவர்களிடம் அவை நாகரீகத்தையோ அல்லது மக்களுக்கு நன்மை அளிக்கும் முடிவுகளையோ எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் , ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. இதைத் தடுக்க மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 24 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதனால் இன்று மதுவுக்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டிய தமிழக அரசு, இலக்கு நிர்ணயித்து மதுவை விற்பனை செய்துகொண்டிருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை. மேலும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்ற பொய்யான சாக்கிற்குள் ஒளிந்து கொண்டு, மக்களை மது என்ற சாத்தானுக்கு தமிழக அரசு இரையாக்கி வருகிறது. மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத, வானத்தை வில்லாக வளைக்கும் செயல் அல்ல. தமிழக அரசு நினைத்தால், காவல்துறை உதவியுடன் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் கூட இல்லாமல் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த முடியும்.
1991-ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டியது அந்தந்த பகுதி காவல்நிலைய அதிகாரிமற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் பொறுப்பு; ஏதேனும் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதேபோன்ற ஆணையை இப்போதும் பிறப்பிப்பதன் மூலம் தமிழகத்தை மதுவோ அல்லது கள்ளச் சாராயமோ இல்லாத மாநிலமாக மாற்றலாம்.
ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு சிறிதும் இல்லை. மது, இலவசம், திரைப்படம் ஆகிய மூன்று தீமைகளுக்கு மக்களை அடிமைகளாக்கி, அவர்களை சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் திராவிடக் கட்சிகளின் நோக்கமாகும். அதனால் தான் பொங்கல் திருநாளின் போது, பொங்கல் பரிசு என்ற பெயரில் வீட்டுக்கு வீடு ரூ.100 பணத்தைக் கொடுத்து, மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை தமிழக அரசு அரங்கேற்றியது.
இப்படிப்பட்ட அரசிடம் மதுவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பின் பிறப்பிக்கும் முதல் உத்தரவு மதுக்கடைகளை மூடும் உத்தரவாகத் தான் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்', என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: