டெல்லியில் ஓடும் பேரூந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பிறப்பித்தது.
இச்சட்டம் அடுத்த மாத தொடக்கத்தில் காலாவதியாகிவிடும் என்பதால், அதற்கு பதிலாக குற்றவியல் சட்டத் திருத்த மசோதா- 2013 என்ற சட்ட முன்வடிவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
அதேநேரத்தில், இந்த சட்டம் கொண்டுவரப்படுவதன் நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், பெண்கள் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை தற்போதுள்ள 18-லிருந்து 16-ஆக குறைப்பது என்று மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் 10 ஆக இருந்த பாலுறவு சம்மத வயது பல்வேறு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் படிப்படியாக 18-ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பாலுறவு சம்மத வயதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலைநாடுகளில் பாலுறவு சம்மத வயது திருமண வயதை விட குறைவாக இருப்பது சாதாரணமான ஒன்றாகும். அது அவர்களின் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.
ஆனால், இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலுறவு சம்மத வயதை அதைவிட குறைவாக நிர்ணயிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால், இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலுறவு சம்மத வயதை அதைவிட குறைவாக நிர்ணயிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அது நமது கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத ஒன்றாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்புகளைக் கண்டு வியந்து, அதை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில், மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மயங்கி, பாலுறவு வயதைக் குறைப்பது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானதாகும்.
குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ‘‘ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகின்றனர்.
21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தங்களின் வாழ்க்கைத்துணை தமக்கு ஏற்றவரா? என்பதை தீர்மானிக்க முடியாது என்பதால், திருமண வயதையே 21-ஆக உயர்த்த வேண்டும்’’ என நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்திருக்கும் நிலையில், பாலுறவு வயதை முன்பிருந்தபடி குறைக்க முயல்வது பிற்போக்குத் தனமான நடவடிக்கையாகும்.
பதின்வயதில் குழந்தைகளின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்; இதனால் அவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்ய முயலுவார்கள் என்பதால் அவர்களை அந்த வயதில் கவனமாக கையாள வேண்டும் என்று சட்டவல்லுனர்களும், மருத்துவ வல்லுனர்களும் எச்சரித்துள்ள நிலையில், இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கலாச்சார தற்கொலைக்கு சமமானதாகும்.
எனவே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவில் பாலுறவு சம்மத வயது தொடர்பான பிரிவை நீக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை ஆய்வு செய்து பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment