Monday, February 25, 2013

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்'

சென்னை: "தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும், மதுபானக் கடைகளை, அடுத்த மாதத்துக்குள் அகற்ற வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவின்படி, 500, மதுபானக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில், 6,654 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மது அருந்தி விட்டு, வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவோரை, குஷிப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில், நீண்ட தூர பயணம் செய்யும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், "தாக சாந்தி' செய்து விட்டு, வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், கே.பாலு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கூறியிருப்பதாவது: தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில், டாஸ்மாக் கடைகள், ஏராளமாக இயங்கி வருகின்றன. இந்த கடைகளில், மது பானங்களை குடித்து விட்டு, வாகனங்களை ஓட்டுவதன் மூலம், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அனைத்தையும், உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவுக்கு, மதுவிலக்கு துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்த உடன், அது பற்றி, மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், அங்கு புதிய கடைகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது எனவும், கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, டாஸ்மாக் கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்ற, மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநில அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் கே.பாலு, ""தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு கூறுகிறது; ஆனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சமீபத்தில், புதிதாக இரண்டு கடைகள் திறக்கப்பட்டன,'' என்றார்.
இதற்கு, "டாஸ்மாக்' தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துராஜ், ""தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கடைகளை அகற்ற, அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிதாக, தேசிய நெடுஞ்சாலையில், கடைகள் திறக்கப்படவில்லை. அனைத்து கடைகளையும் அகற்ற, 6 மாதம் அவகாசம் தர வேண்டும்,'' என்றார். அரசு தரப்பில், கால அவகாசம் கோரியதை, நீதிபதிகள் ஏற்கவில்லை. "தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும், மதுபானக் கடைகள் அனைத்தையும், மார்ச் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகளில், 500, மதுபானக் கடைகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த, 500, கடைகளும் அடுத்த மாத இறுதிக்குள் மூடப்பட உள்ளன.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: