மயிலாடுதுறையில் நடந்த அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழ்நாட்டில் இதுவரை 26 மாவட்டங்களில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் கூட்டம் நடத்த உள்ளோம். வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பது பழிவாங்கும் நோக்கத்திற்கும், காசு பறிப்பதற்கும், கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சட்டத்தில் டீக்கடைக்காரர் முதல் தொழிலதிபர்கள் வரை பாதிக்காதவர்கள் யாருமே இல்லை. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரிகளை மிரட்ட இந்த வன்கொடுமைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவேதான் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறோம்.
நாங்கள் காதல் திருமணத்தை எதிர்க்கவில்லை. காதல் நாடகத் திருமணத்தைதான் எதிர்க்கிறோம். டீன் ஏஜ் பருவம் என்பது முடிவெடுக்க தெரியாத பருவம். அப்போது அவர்களை இலக்காக வைத்து காதலித்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதைத்தான் கண்டிக்கிறோம்.
பெண்ணின் திருமண வயது 21 ஆகவும், ஆணிற்கு 23 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். பிரேசில், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெண்ணின் திருமண வயது 21, ஆணின் வயது 23 ஆகும். 21 வயதிற்குள் திருமணம் என்றால் பெற்றோர் சம்மதம் அவசியம் வேண்டும். அதேபோலதான் நம் நாட்டிலும் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதுதொடர்பாக பிரச்சாரம் செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் வைக்கிறோம். இந்த அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கூட்டங்கள் நடத்துவதால் கட்சி பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்காகதான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
No comments:
Post a Comment