இனப்படுகொலையை கண்டித்தும், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் பா.ம.க. சார்பில் தமிழகம் முழுவதும் 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மனிதகுலம் இதுவரை கண்டிராத வகையில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளை இலங்கை அரசு நடத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் தமிழர்களின் இதயங்களை பிழியும் வகையில் உள்ளன.
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை படையினரால் பதுங்கு குழியில் பிடித்து வைக்கப்பட்டு, சிறிதும் இரக்கமில்லாமல், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ஆதாரமான புகைப்படங்களை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது.
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம்
காண்போர் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவியை பெருக்கெடுக்கவைத்த அந்த புகைப்படங்கள் மட்டுமே, ராஜபக்சே மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமானவை.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களும், போருக்கு பின்னர் சிங்களப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகளும் எவ்வளவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர், போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழ் சகோதரிகள் எப்படி எல்லாம் இரக்கமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதற்கும் பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நீதிமன்ற கூண்டில் ராஜபக்சே
இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அந்நாட்டை காப்பாற்றுவதையே கடமையாக கொண்டிருக்கும் இந்தியா, அதன் போக்கை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இத்தகைய சூழலில், ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும்போது இந்திய அரசு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
கொடுங்குற்றம் செய்த ராஜபக்சே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும்.
கொடுங்குற்றம் செய்த ராஜபக்சே சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு உள்ளது. எனவே, இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும்.
26-ந் தேதி போராட்டம்
இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க. சார்பில் தொடர்முழக்க போராட்டம் நடத்தப்படும்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாவட்டத் தலைநகரங்களில் கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். இந்த போராட்டங்களில் பா.ம.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment