பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2013-14-ம் நிதி ஆண்டிற்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை இன்று வெளியிட்டார். சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்பு நிருபர்களுக்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கடந்த 11 வருடமாக பா.ம.க. சார்பில் மாதிரி நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. சமூக பொருளாதார அரசியல் கடமையாக கருதி இதை வெளியிடுகிறோம். மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத் திற்காக இந்த மாதிரி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக தற்போதைய நிலை குறித்து பொருளாதார கொள்கையை வெளியிடுவது போல தமிழகத்திலும் வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மகளிர் மேம்பாட்டை உள்ளடக்கி நிதிநிலை அறிக்கை தனியாக வெளியிட வேண்டும். ரெயில்வே துறைக்கு பட்ஜெட் வெளியிடுவது போல வேளாண்மை துறைக்கும் தனியாக வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வி, சுகாதாரம், விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து முக்கிய அம்சங்கள் இதில் வெளியிட்டு உள்ளோம் என்றார்.
இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸ் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: பூரண மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இப்போது இதனை சில கட்சிகள் கையில் எடுத்துள்ளதே?
பதில்: 1986-ம் ஆண்டு பா.ம.க. கட்சியை ஆரம்பித்தோம். கட்சி ஆரம்பித்த 3 மாதத்தில் இருந்தே பூரண மது விலக்கை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இப்போது ஓட்டுக்காக இதனை சில கட்சிகள் கையில் எடுத்து உள்ளன.
கேள்வி: பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் கள்ளச் சாராயம், உயிர் இழப்பு அதிகரிக்குமே?
பதில்: அதற்கான மாற்றுத் திட்டம் எங்களிடம் உள்ளது. அதனை ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment