பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2013&14ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித் துறை நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்வண்டிக் கட்டணங்கள் கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, பயணிகள் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுமோ என மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருப்பது நிம்மதியளிக்கிறது.
அதேநேரத்தில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் தட்கல் முன்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும், அதிவிரைவு வண்டிகளுக்கான முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களை பாதிக்கும்.
அதேநேரத்தில், மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் தட்கல் முன்பதிவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதும், அதிவிரைவு வண்டிகளுக்கான முன்பதிவு கட்டணம், முன்பதிவு ரத்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களை பாதிக்கும்.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் உயரக்கூடும். இந்த கட்டண உயர்வு தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்.
புதிய விரைவு வண்டிகளைப் பொருத்தவரை மொத்தம் அறிவிக்கப்பட்ட 67 வண்டிகளில் 12 வண்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கிடைத்திருக்கின்றன. இவைதவிர பழனி& திருச்செந்தூர் பயணிகள் வண்டி, சென்னை& திருப்பதி மின்சார வண்டி ஆகியவையும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை வரவேற்கப்பட வேண்டியவையாகும்.
தமிழகத்திற்கு கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்ட 11 ரயில்களில் 4 ரயில்கள் இன்னும் இயக்கப்படாத நிலையில், அவற்றையும், புதிய ரயில்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 5 ரயில்களின் இயக்க நாட்கள் அதிகரிக்கப் பட்டிருக்கின்றன. எனினும், இவற்றில் 3 ரயில்கள் 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் என்பதால் இந்த அறிவிப்பு வெறும் கண் துடைப்பே.
மேலும், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சென்னை& திருச்சி இடையிலான மலைக்கோட்டை விரைவு வண்டியை மீண்டும் இயக்குவது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
காரைக்கால் & பேரளம், தஞ்சை & பட்டுக்கோட்டை இடையே புதிய பாதை அறிவிக்கப்பட்டிருப்பதும், ஆவடியிலிருந்து திருப்பெரும்புதூர் வழியாக கூடுவாஞ்சேரி வரை புதிய பாதை அமைப்பதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், தஞ்சாவூர் & அரியலூர் புதியபாதை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மக்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதேபோல் மின்மயமாக்கல், இரட்டைப்பாதை ஆகியவற்றில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரல் & பேசின் பாலம் இடையே மேலும் இரு பாதைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பயணிகளுக்கு பெரிய அளவில் எந்த பயனையும் அளிக்காது. செங்கல்பட்டு & திருச்சி இடையே இரட்டைப் பாதை அமைக்கும் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராததும் கண்டிக்கத்தக்கது. கொல்கத்தா, மும்பையில் புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் புறநகர் ரயில்சேவைகள் அதிகரிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
ரயில்வேத்துறையில் உள்ள1.52 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், ரயில்வே பாதுகாப்புப் படையில் 10% பணியிடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும், உணவின் தரம் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மொத்தத்தில் புதிய ரயில்கள் உள்ளிட்ட சில அறிவிப்புகள் மகிழ்ச்சியளித்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான தேவைகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment